உலு திரெங்கானு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திரெங்கானுவில் உள்ள பெலுக்கார் புக்கிட் நீர்வீழ்ச்சியில் பலியான துயர சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நிகழ்ந்தது.
கோலசிலாங்கூரிலுள்ள பண்டார் புஞ்சாக் ஆலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் இந்த நீர்வீழ்ச்சிக்கு தங்களின் விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தந்தனர். மகிழ்ச்சியுடன் தங்களின் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் குடும்பத் தலைவரான, 44 வயதான பொறியியலாளர் அப்துல் ஹாலிம் சாமியான் மற்றும் அவரது மனைவி நுருல் அடிலா (39 வயது), மூன்று மகள்களான நுருல் அரிஃபா (16 வயது), நுருல் அய்னா (11 வயது), நுருல் இசா (10 வயது) ஆகிய ஐவரும் நீர்வீழ்ச்சியின் வலிமையான நீர் ஓட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினர்.
பெலுக்கார் புக்கிட் நீர் வீழ்ச்சிப் பகுதி – கோப்புப்படம்
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் குடும்பத்தில் எஞ்சியிருந்த 9 வயது மகனான ஹாசிப் அப்துல் ஹாலிம் ஆவான். அவனும் தனது குடும்பத்தைச் சார்ந்த ஐவர் ஒரே நேரத்தில் ஒரே சம்பவத்தில் தன் கண் முன்னாலேயே உயிரிழந்ததை நேரில் கண்டுள்ளதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கும், தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளான்.
நடந்தது என்ன?
நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் படிப்பவர்களை எப்படியும் ஒரு முறை உலுக்கச் செய்துவிடும்.
நீர் வீழ்ச்சியின் ஒதுக்குப் புறமான பகுதியில் இந்தக் குடும்பம் ஆனந்தமாக நீந்தி, தங்களின் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த தருணத்தில், தனது குடும்ப உறுப்பினர்கள் நீர் ஓட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு உரக்கக் குரல் கொடுத்திருக்கின்றான் ஹாசிப். ஆனால், பக்கத்தில் இருந்த உள்ளூர் கிராமவாசிகள் வந்து சேருவதற்குள் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு சனிக்கிழமை காலை 11.35 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், உடனடியாக அங்கு விரைந்த அவர்கள் பிற்பகல் 12.20 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.
அதற்குள்ளாக ஓர் ஆண், இரண்டு பிள்ளைகள் என மூன்று பேரின் சடலங்களை கிராமவாசிகள் மீட்டிருந்தனர். அதன் பின்னர் கொஞ்ச நேரத்தில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
முதல் கட்ட விசாரணைகளின்படி அந்தக் குடும்பத்தினர் ஆழம் குறைவான பகுதியில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் ஆழமான பகுதிக்குள் சென்று நீந்த முற்பட்டபோது, வலிமையான நீர் ஓட்டத்தினால் இழுக்கப்பட்டிருக்கின்றார். அவரைக் காப்பாற்றப் போன மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீர் ஓட்டத்தால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த 9 வயது மகன் அப்போதுதான் உரக்கக் குரல் கொடுத்து உதவிக்கு அழைத்திருக்கின்றான். ஆனால், அதற்குள் அனைவரும் நீர் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டனர்.
இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியை மூடுமாறு திரெங்கானு மந்திரி பெசார் உத்தரவிட்டுள்ளார்.
மாண்டவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவே அருகிலிருந்த இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.