பத்து பகாட் – தாய்லாந்தில் சுற்றுலா சென்ற போது சியங்மாய் என்ற இடத்தில், நேற்று பேருந்து விபத்திற்குள்ளாகி 13 மலேசியர்கள் பலியானதைத் தொடர்ந்து, அவர்களின் சடலங்களை அடையாளம் காட்ட இன்று அவர்களின் உறவினர்கள் 15 பேர் தாய்லாந்திற்கு செல்கின்றனர்.
இன்று திங்கட்கிழமை காலை 5 மணியளவில் பத்து பகாட்டில் இருந்து கிளம்பிய அவர்கள் தற்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருப்பதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மதியம் 1 மணியளவில் தாய் ஏர்வேஸ் மூலம் தாய்லாந்து புறப்படும் அவர்கள், பாங்காக் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தை மாலை 5 மணியளவில் சென்றடைவார்கள் என்று கூறப்படுகின்றது.
22 மலேசியச் சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் தாய்லாந்தில் சியாங்மாய் நகரிலுள்ள டொய் சாக்கெட் என்ற பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து, வேறு ஒரு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்க்க சாலையின் ஓரத்தில் சரிந்து பள்ளத்தில் விழுந்ததாகத் தாய்லாந்து செய்தி இணையதளங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமார் 11 மலேசியர்கள் பலியாகியுள்ள நிலையில், மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளனர்.
இன்னும் 4 மலேசியர்கள் கடுமையான காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (ANN)