பெட்டாலிங் ஜெயா – தாமான் ஜெயா எல்ஆர்டி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக நட்பு ஊடகங்களின் வழி பரவிய வதந்தியை காவல்துறை மறுத்துள்ளது.
அது ஒரு தீவைப்பு சம்பவம் என்பதை ஒப்புக் கொள்ளும் பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் மொகமட் சைனி செ டின், தற்போது அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீ விபத்திற்குக் காரணம் வெடிகுண்டு அல்ல என்பதை சைனியும், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பெட்டாலிங் ஜெயா தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கார்களுக்கும் பரவியது.
இச்சம்பவத்தில் இரண்டு கார்கள் தீயில் முற்றிலும் அழிந்த நிலையில், மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் 1.32 மணியளவில் தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.