புது டெல்லி – டெல்லி மருத்துவ மாணவி கொலை வழக்கில், மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவையும், இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், குற்றவாளியின் விடுதலை குறித்து நிர்பயாவின் தாய் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “குற்றவாளியின் விடுதலை, 18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட சான்றிதழ் அளிக்கப்பட்டது போல இருகிறது. இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் நான் அதிர்ச்சியும் அடையவில்லை.”
“எல்லாம் நீதிமன்ற முறைப்படி நடந்திருக்கிறது. இனி எங்கே நம்பிக்கை இருக்கப்போகிறது? எனது மகளின் சம்பவத்துக்கு பிறகும் கூட பாடம் கற்கவில்லை. இனிமேல் எதிர்பார்க்க என்ன இருக்கிறது?” என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றவாளி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நிர்பயாவின் பெற்றோர் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.