சென்னை – ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த தன்பீரிட்பால்(30) என்பவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்த நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ஓய்வே இல்லாத கடுமையான பணிச் சுமையால், அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த தன்பீரிட்பால், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி புரியும் தனது கணவர் அனுப்நாயருடன் சென்னை மீனம்பாக்கம் ஏர்–இந்தியா குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனுப்நாயர், தனது பணி முடிந்து, வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தன்பீரிட்பால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மீனம்பாக்கம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுப்நாயரிடமும், சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தன்பீரிட்பாலின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தன்பீரிட்பாலின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சனை காரணமில்லை என்றும், கடுமையான பணிச் சுமை தான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
தென்னக ஏர்–இந்தியாவில், பணிப்பெண்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் என 600 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 300 முதல் 350 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பணியில் இருப்பவர்களுக்கு, கடுமையான வேலைப்பளு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இளம் பணிப்பெண்களுக்கு, அதிகப்படியான வேலை கொடுக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் அல்லாமல், வெளிநாட்டிற்கு சென்று வந்தால் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது ஓய்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இளம் பணியாளர்களுக்கு, ஓய்வு நேரம் குறைவாகவே அளிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே தன்பீரிட்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், காவல்துறை தன்பீரிட்பாலின் மரணம் தொடர்பாக, தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.