கோலாலம்பூர் – சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் மலேசியர்களின் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் ‘ஜகாட்’ திரைப்படம், கடந்த டிசம்பர் 17-ம் தேதி, மலேசியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்று வரும் வேளையில், தமிழக இயக்குநர் சமுத்திரக்கனி அப்படத்தைப் பார்த்துவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஜகாட் திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது:-
“உணர்வாக ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்திருக்கும் திருப்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடல் கடந்து வாழும் நமது தமிழ்ச் சமுதாயம் இப்படி ஒரு படத்தைப் பதிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் எப்படி இருக்கிறோமோ? யார் யாரையெல்லாம் கடந்து போகிறோமோ? என்ன நிஜங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ? அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள்.”
“குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போய் படத்தைக் காட்டுங்கள். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. ஒரு குழந்தையை வளர்ப்பது பெற்றோர் மட்டுமல்ல, பள்ளி வளர்க்கிறது, சமூகம் வளர்க்கிறது, அக்குழந்தை யாரையெல்லாம் கடந்து செல்கிறதோ அவர்களும் வளர்க்கிறார்கள்.அதையெல்லாம் பார்த்து தான் அக்குழந்தை வளர்கிறது. அதை அவ்வளவு அழகாக இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்”
“இயக்குநர் சஞ்சய் அருகில் அமர்ந்து பேசுகிறேன். சக படைப்பாளியுடன் அமர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும். சக தமிழனாக, நமக்குப் பக்கத்திலேயே இருக்கும் ஒரு தமிழன் இப்படி ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கு கட்டாயமாக நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.” இவ்வாறு சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் காணொளியைக் கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:-
https://www.facebook.com/jagatthemovie/videos/1186518188044157/