கொல்கத்தா – கொல்கத்தா விமான நிலையத்தில், நின்றிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்து ஒன்று இன்று அதிகாலை மோதியது. இதில் விமானத்தின் நடுப்பகுதி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
இன்று காலை அசாம் மாநிலம் சில்ஷார் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது.
பேருந்தின் ஓட்டுனர் தூங்கியதால், இந்த விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த ஓட்டுனர் உடனடியாக கைது செய்யப்பட்டு அதிகாரிகளின் விசாரணைப் பிடியில் உள்ளார்.
இதற்கிடையே விமானத்திற்கு ஏற்பட்ட சேதாரத்தை, ஏர் இந்தியா கணக்கிட்டு வருவதாகவும், எப்படியும் 100 கோடி ரூபாய், ஜெட் ஏர்வேசிடம் இழப்பீடு கோர உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.