கோலாலம்பூர் – மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தாக்கப்பட்டது தொடர்பில், காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்டுடன் இரண்டு முறை தான் தொடர்பு கொண்டதாகவும், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தான் வலியுறுத்தியுள்ளதாகவும், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ம.இ.கா கட்சியில் அமைதி காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி கடந்த வியாழக்கிழமையன்று டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தை என்ற தோற்றத்தில் வந்திருந்த போதிலும், அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுமுகமான முறையில் இல்லை. ம.இ.காவில் இருக்கக்கூடிய உறவுகளை வலுப்படுத்தக்கூடிய நிலையிலும் இல்லை. அங்கு நடந்தேறிய சம்பவங்களின் இறுதியில் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி தாக்கப்பட்டுள்ளார். இதனை அவர்களோடு வந்த கும்பலில் இருந்தவர்களே செய்துள்ளனர். அவர்கள் ம.இ.கா கட்சியோடு தொடர்புள்ளவர்களா என்று தெரியாது. ஆனால், கட்சியோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது வந்திருந்த கும்பலின் தூண்டுதலினாலோ அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். எனவே, காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மெற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற முடிவு மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என்றும் டாக்டர் சுப்ரா கூறியுள்ளார்.
“காவல் துறைத் தலைவரிடம் பேசியுள்ளேன்”
“இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், தாக்கப்பட்டிருப்பவர் கட்சியின் துணைத்தலைவர் மட்டுமின்றி மாநில சபாநாயகரும் ஆவார். அவருக்கென்று தனி பொறுப்பும் அங்கீகாரமும் இருக்கின்றது. இவையனைத்தையும் மீறி அவர் தாக்கப்பட்டுள்ளார். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இந்நாட்டில் ஒழுக்கம் என்பது இல்லாமல் போய்விடும். எனவே, காவல்துறையினர் இதனை மெத்தனமாகக் கையாளாமல் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனை நான் காவல்துறையின் தலைவரிடம் 2 முறை சந்தித்தும் குறுந்தகவல் வழியாகவும் வலியுறுத்தியுள்ளேன். எங்களுக்கு இதன் முடிவானது தீவிரமாகத் தெரிய வேண்டும்” என்றும் சுப்ரா மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இதற்கு அடிப்படை காரணம் யார் என்று அறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சியில் இத்தகைய கலாச்சாரம் அரங்கேறுவதை நாங்கள் விரும்பவில்லை. சமுதாயத்திற்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் இங்கு இருக்கிறோம். இந்தப் போராட்டத்திலேயே மூழ்கியிருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. கட்சி அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இது குறித்து மத்திய செயலவைக் கூட்டத்தில் தீவிரமாகக் கலந்துரையாடியுள்ளோம். இச்சம்பவம் நிச்சயம் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது. தானாகவோ, பேச்சுவார்த்தை முற்றலினாலோ, கருத்து வேறுபாட்டினாலோ இச்சம்பவம் நடக்கவில்லை. காரணமே இல்லாமல் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்றால் இது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுத்தப்பட்டதே ஆகும். இதன் பின்னணியைக் காவல்துறையினர் விசாரணையின் வழி கண்டறிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
வெளிதரப்பினரை கட்சியில் இணைத்துக் கொள்ள இனி பேச்சு வார்த்தை இல்லை
“அடுத்ததாக, கட்சிக்கு வெளியில் இருக்கும் தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கட்சிக்குள் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான சூழலில் இத்தகைய தாக்குதலோடு, கட்சிக்குள் மீண்டும் சேர நினைப்பவர்களைச் சேர விடாமல் மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளானது, கட்சியில் மீண்டும் சேர வேண்டும் என்ற முடிவினாலா அல்லது கட்சியில் மேலும் யாரையும் சேர விடக்கூடாது என்ற சூழ்ச்சியினாலா என்று எனக்குச் சந்தேகம் எழுகிறது” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இத்தகைய சூழலிலும் ஏறக்குறைய 342 கிளைத்தலைவர்கள் வேட்புமனுத்தாக்கலில் கலந்து கொண்டுள்ளனர். எஞ்சியவர்கள் வரவில்லை. இருந்த போதிலும் கட்சிக்குள் வராவிட்டாலும் அவர்களுக்குரிய மரியாதையைக் கட்சி அவர்களுக்கு வழங்கும். ஏனெனில், அவர்கள் எந்தத் தப்பும் செய்யாதவர்கள். இது ஒரு பக்கம் இருக்க, கட்சியின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நிலையில் போராட்டம் நடத்த வருபவர்களோடு இனி பேச்சு வார்த்தை நடத்தி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை. அதில் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்ற முடிவிற்கு நாங்கள் வந்துவிட்டோம்” என்றும் சுப்ரா விரக்தியுடன் கூறியுள்ளார்.
டத்தோ இரமணன் நீக்கம்
“அவர்கள் (கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள்) என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது அவர்களைச் சார்ந்தது. அதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அது எங்களுக்கு அப்பாற்பட்டதாகும். அதேநேரத்தில் சில வேலைகளில், கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய செயலவையில் இருக்கக்கூடிய எல்லா உறுப்பினர்களும் உணர்ச்சிபூர்வமாக அவர்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், டத்தோ ரமணனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற முடிவைக் கட்சியின் மத்திய செயலவை எடுத்துள்ளது. அவருக்கு ஏற்கனவே ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் கட்சியில் இருக்கக்கூடிய வழக்கமான நடவடிக்கைகளுக்கு மீறிச் செயல்பட்டு வருகிறார். எனவேதான், மத்திய செயலவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பிரிவுகளோடு உட்படுத்தப்பட்ட காரணத்தோடும் குறித்த முடிவினை அவருக்குத் தெரியப்படுத்துவோம்” என டத்தோ ரமணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் சுப்ரா தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
“இன்னும் பலர் கட்சியின் ஒழுங்கினைச் சீர்குலைத்து வருகின்றனர். அதனையும் ஆராய்ந்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை மத்திய செயலவை உறுதிச் செய்யும். இவையனைத்தும் புதன்கிழமை நடந்து முடிந்த மத்திய செயலைவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாகும்” என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.