சென்னை – விஜய் நடிப்பில் ஆகக் கடைசியாக வெளிவந்த ‘புலி’ திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூலில் திருப்தியில்லை என்ற குறை கூறல்கள் இருந்த போதிலும், அவரது அடுத்த படமான ‘தெறி’ மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.
படத்தில் காவல் துறை அதிகாரியான தோற்றத்திலும், கண்ணாடி போட்ட சாதாரண நபர் போன்ற தோற்றத்திலும் விஜய் தோன்றுவதால், படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆரூடங்களும் இன்னொரு புறத்திலும் தமிழகத்தைக் கலக்கி வருகின்றன.
இந்நிலையில் தெறி படத்தின் தொலைக்காட்சி மற்றும் சாட்டிலைட் எனப்படும் துணைக்கோள ஒளிபரப்பு உரிமைகள் மொத்தம் 24.5 கோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் எந்திரன் படத்திற்குப் பிறகு அதிக விலையில் தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை செய்யப்பட்ட படமாக தெறி திகழ்கின்றது என தமிழகத்தின் திரைப்பட வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.