Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: பசங்க 2 – பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

திரைவிமர்சனம்: பசங்க 2 – பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

964
0
SHARE
Ad

pasanga_fl001கோலாலம்பூர் – வெட்டு, குத்து, பழிவாங்கல், கவர்ச்சி போன்றவற்றை முன்னிறுத்திக் காட்டி வெளிவரும் படங்களுக்கு நடுவில், ‘பசங்க 2’ போன்ற படங்கள் அவ்வப்போது வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியும், ஆறுதலை அளிக்கின்றது.

அந்த வகையில், பெற்றோர்களுக்கும், ஆசியர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பாடமாக ஒரு படத்தை இயக்கியுள்ள இயக்குநர் பாண்டிராஜை மனதாரப் பாராட்டலாம்.

இதற்கு முன்பு, பாண்டிராஜ் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்த ‘பசங்க’ படத்தின் பாகம் இரண்டு என்ற தலைப்புடன் ‘பசங்க 2’ வந்திருந்தாலும், அதன் முந்தைய கதைக்கு முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தைக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கதைச் சுருக்கம்

எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது சேட்டைகளைச் செய்து கொண்டே இருக்கும் குழந்தைகளான கவின் மற்றும் நயினா இருவரையும் அவர்களின் பெற்றோர்கள் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களின் அந்தத் துறுதுறு குணத்திற்கு மருத்துவர்கள் ஏதேதோ பெயர்களைச் சொல்லி மருத்துவம் பார்க்கிறேன் என்று காசைப் பிடுங்க, அக்குழந்தைகள் இருவருக்கும் விடிவெள்ளியாக வருகிறார்கள் சூர்யா – அமலாபால் தம்பதியர். அதன் பின்னர், பிள்ளையைக் கருவில் சுமப்பதில் இருந்து, குழந்தைகள் வளர்ப்பு, அக்கறை வரையில் ரசிகர்களுக்கு சூர்யா, அமலாபால் எடுக்கும் பாடம் தான் மீதிக்கதை.

நடிப்பு

pasanga-2_144343972600பாதி படத்திற்குப் பிறகு தான் சூர்யா, அமலாப்பால் முகத்தையே காட்டுகிறார்கள். என்றாலும், சூர்யா தமிழ்நாடானாகவும், அமலாபால் வெண்பாவாகவும் மனதில் அப்படியே பதிந்துவிடும் அளவிற்கு அழுத்தமான கதாப்பாத்திரம்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவராக சூர்யா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தைகளோடு, குழந்தைகளாக அவர் போடும் ஆட்டமும், பாட்டும் அசத்தல் ரகம்.

அதேபோல், அமலாபால் அழகி.. டீச்சராக, இரு குழந்தைகளுக்குத் தாயாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

இவர்களோடு, கவின், நயினா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இரு குழந்தைகளும், படம் பார்க்கும் நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு, நடிப்பிலும், வசனத்திலும், உடல்மொழிகளிலும், முகபாவனைகளிலும் கலக்குகிறார்கள்.

surya-story_647_101715064614அவர்கள் இருவரின் பெற்றோர்களாக ராமதாஸ், வித்யா, கார்த்திக், பிந்துமாதவி ஆகியோர் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார்கள். ராமதாஸ் காமெடிக் காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன. அதிலும், “எங்க பரம்பரையில யாருமே திருடுனது இல்ல” என்று அவர் திருதிருவென முழித்துக் கொண்டே சொல்லும் காட்சிகளை மனம் விட்டுச் சிரிக்கலாம்.

இவர்களோடு, சமுத்திரக்கனி, சூரி, இயக்குநர் சீனு இராமசாமி ஆகியோரும் ஆங்காங்கே வந்து நம்மை மகிழ்ச்சிபடுத்துகிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, வசனங்கள்

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு அழகு. அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள் என கேமரா அதைச் சுற்றியே நகர்ந்தாலும், நமக்கு அலுப்பு தட்டாத வகையில் காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார். அதற்கு ஏற்ப படத்தொகுப்பு பக்கபலம் சேர்த்திருக்கிறது.

‘பிசாசு’ பட இசையமைப்பாளர் அரோல் கரோலி பணியாற்றியிருக்கும் இரண்டாவது படம். பின்னணி இசையும், பாடல்களும் அற்புதமாக வந்துள்ளது.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, யுகபாரதி வரிகளில் பாடல்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவையாக உள்ளன.

படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஒவ்வொன்றையும் எழுதி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு உண்மை.

‘குழந்தைகள் எப்போதுமே கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள். கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுவார்கள்’

‘ரேங்க் (Rank) என்னைக்குமே நான் பார்க்குறது இல்ல.. அது ராங்கு (Wrong)’

‘ஏன் மந்தமா இருக்கான்னு சொல்றீங்க.. சாந்தமா இருக்கான்னு சொல்லலாமே?’

‘தமிழ் ஸ்கூல்ல படிக்குற பிள்ளைங்க தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுறாங்க.. இங்கிலீஸ் ஸ்கூல்ல படிக்குற பிள்ளைக இங்கிலீஸ்ல கெட்டவார்த்த பேசுவாங்க’

போன்று படத்தில் ஆங்காங்கே நச்சென வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

பாடங்கள்

வெறும் படமாக மட்டுமின்றி கருவுற்றிருக்கும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், ‘ஆக்டிவ்’ குழந்தைகளுக்கும், ‘ஹைபர் ஆக்டிவ்’ குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?, அதை எப்படிக் கையாள்வது? குழந்தைகளிடம் எப்படி பெற்றோர்கள் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்? என சூர்யா, அமலாபால் மூலமாக ஒரு பாடமே நடத்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதன் மூலம் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

pasanaga2-review241215-mஇந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தாரே ஜமின் பர்’ படத்தின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்தாலும், ‘பசங்க 2’ சொல்ல வரும் விசயம் சற்று வேறுபடுகின்றது.

மொத்தத்தில், பசங்க 2 – பெற்றோர்களுக்குப் பயன்படும் வகையில், அழகான கதையம்சத்துடனும், பல உதாரணங்களுடனும் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம்.

மற்றபடி, முஷ்டி முறுக்கி ஹீரோ நாலு பேரை தூக்கி பந்தாடுவது, இரண்டு ஐயிட்டம் சாங்கோடு கொஞ்சம் கிளுகிளுப்பு, பனிப்பொழியும் ஒரு பிரதேசத்தில் காதல் பாடல், இரட்டை அர்த்த வசனங்களுடன் நகைச்சுவை இவற்றில் எதையாவது எதிர்பார்த்துச் செல்லும் ரசிகர்களுக்கான படம் இது அல்ல.

-ஃபீனிக்ஸ்தாசன்