Home Featured தமிழ் நாடு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை மறைக்க சிம்பு தான் பலிகடாவா?

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை மறைக்க சிம்பு தான் பலிகடாவா?

489
0
SHARE
Ad

simbuசென்னை – சிம்புவின் பீப் பாடல் வெளிவந்த போது இவ்வளவு பூதாகரமாக்கப்படும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தப்பிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்க, பல்வேறு மாநிலங்களுக்குத் தனிப்படை அமைப்பது போல், சிம்பு நடத்தப்படுவது நடுநிலைவாதிகளைப் பலமாக யோசிக்க வைத்திருக்கிறது. சிம்புவின் பாடல் சரி? தவறு? என்று விவாதத்தில் இறங்குவதை விட, தமிழகம் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தாண்டி, ஏன் இந்த விவகாரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கேட்பதே நியாயமாகப்படுகிறது.

பீப் பாடல் தொடர்பாக, ஆரம்பத்தில் சிம்புவிற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பினாலும், தற்போது, இவ்வளவு பூதாகரமாக்க வேண்டாமே என, பலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து, சில நடுநிலையாளர்கள் வெளியிட்டுள்ள தகவல் நம்மையும் யோசிக்க வைக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை, நட்பு ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது குறித்தும், செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாகத் திறக்கப்பட்டது குறித்தும் அதிகமான சர்ச்சைகள் வெடித்தன. அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

chennai-floodபல்வேறு கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பின. தொடர்ந்து மௌனம் காத்து வந்த அரசு, அதன் பிறகு தாமதமாக உயர் அதிகாரி மூலம் ஏரி திறப்பிற்கான உப்புசப்பில்லாத விளக்கத்தை அளித்தது. எனினும், அந்த விளக்கம் எதிர்கட்சிகள் மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் திருப்தி அளிக்கவில்லை. இந்த பிரச்சனையில், கடுமையாக குற்றம்சாட்டப்பட்ட முதல்வர், கடைசி வரை ஒரு மறுப்பு அறிக்கை கூட வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

கண்டிப்பாக இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் வெடிக்கும். எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில் தான், சிம்பு வகையாக சிக்கிக் கொண்டார். பீப் பாடல் வெளிவந்த முதல்  நான்கு நாட்கள் வரை பெரிய அளவில் பிரச்சனை கிளம்பவில்லை. அதன் பிறகு, கிளம்பிய சர்ச்சைகளும், வழக்குகளும் நாம் அறிந்தது தான்.

சிம்புவின் இந்த பீப் புயல், மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சர்ச்சையை மறைத்துவிட்டதோ? என எண்ணத்தோன்றுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டு எழுவதற்கே பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில், ஏற்பட்டிற்கும் அதிருப்தியை மற(றை)க்கச் செய்ய, சிம்பு பலிகடா ஆக்கப்பட்டாரா? என்று ஒரு சாமானியனாக கேள்வி எழுகிறது.

– சுரேஷ்