கோலாலம்பூர் – கடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பேராக் சட்டமன்ற அவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று அம்பாங் சாலையில் இரண்டு நபர்களை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
28 மற்றும் 29 வயதுடைய அந்த இருவரும் நாளை வரை விசாரணைகளுக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்படுவர் என கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத் துறையின் தலைவரான டத்தோ சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.
தேவமணி தாக்குதலில் இந்த இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை நிர்ணயிக்க நாளை அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்நோக்கம் எதுவும் உள்ளதா என்பதைக் கண்டறியவும் காவல் துறையினர் தீவிர விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
இன்றைய கைது குறித்து மேலும் பேசிய சைனுடின், தாக்குதலுக்குக் காரணம் உட்கட்சிப் போராட்டமும், கடந்த மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலும்தான் காரணம் என காவல் துறையினர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பின்னணியில் யாராவது மூளையாகச் செயல்பட்டார்களா – அப்படியானால் அவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் புலனாய்வுகள் நடத்தப்படுவதாக சைனுடின் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மத்திய செயலவைக்குப் பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போதும், தொடர்ந்து விடுத்த பத்திரிக்கை அறிக்கையிலும், மஇகா இந்த தாக்குதலைக் கடுமையாகக் கருதுவதாகவும், இதன் தொடர்பில் தாக்குதலை நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் டாக்டர் சுப்ரா விடுத்த அறிக்கை மற்றும் காவல் துறையினர் தங்களின் விசாரணையில் மெத்தனம் காட்டுகின்றனர் என தேவமணி குறை கூறியிருந்தது ஆகியவை தொடர்பில் கருத்துரைத்த சைனுடின் புகார் கிடைத்தவுடன் தாங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியதாகவும், ஏற்கனவே இருவரைக் கைது செய்ததாகவும், ஆனால், அடையாள அணிவகுப்பு எதிர்மறையாகவும், சாதகமற்ற முறையிலும் இருந்ததால் அவர்களை விடுவிக்க நேர்ந்தது என்றும் அவர் கூறினார்.