Home Featured நாடு “நஜிப்-மொகிதின் இருவரையும் சந்திக்கிறேன்- ஆனால் அரசியல் பேசுவதில்லை” – ஜோகூர் சுல்தான் மனம் திறக்கின்றார்.

“நஜிப்-மொகிதின் இருவரையும் சந்திக்கிறேன்- ஆனால் அரசியல் பேசுவதில்லை” – ஜோகூர் சுல்தான் மனம் திறக்கின்றார்.

1249
0
SHARE
Ad

Joh-Sultan-300-X-200ஜோகூர் பாரு – அண்மையக் காலங்களில் மலேசியாவின் மாநில சுல்தான்களிலேயே மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் தனது கருத்துகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பவராக ஜோகூர் சுல்தான் திகழ்ந்து வருகின்றார். அதே வேளையில் மக்களின் மனங்களில் குமுறிக் கிடக்கும் – ஆனால் வெளியே சொல்லாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் சில கருத்துகளை – வெளியே கொண்டு வருவதிலும் அவர் எப்போதும் முன்னோடியாக நிற்கின்றார்.

ஸ்டார் ஆங்கில நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜோகூர் சுல்தான், பிரதமர் நஜிப், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் ஆகியோர் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணல் இன்றைய ஸ்டார் நாளிதழில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நேர்காணலின் ஒரு சுவாரசியமான பகுதியை இங்கே செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கின்றோம்.

#TamilSchoolmychoice

najibபிரதமருக்கு எதிர்ப்பானவராகவும், அவரைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என்பது போன்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதே எனத் தன்னிடம்  கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜோகூர் சுல்தான் இப்ராகிம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“என்னைப் பொறுத்தவரையில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை. பிரதமரை நான் ஆதரிக்கவில்லை என எப்போதுமே நான் கூறியதில்லை. உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவர்தான் நாட்டின் பிரதமர். ஒவ்வொரு பிரதமரும் அவரவர்கள் காலகட்டத்தில் தவறுகள் செய்திருக்கின்றனர்.

மொகிதினும் என்னைச் சந்தித்துள்ளார்…

அதே வேளையில் மொகிதின் யாசின் எனது மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் என்பதோடு முன்னாள் துணைப் பிரதமரும் ஆவார். அவர் முன்கூட்டியே நேரம் கேட்டு என்னை வந்து சந்திப்பார். அதை நான் அனுமதித்துள்ளேன். ஆனால், அரசியல் பேசுவதை மட்டும் முடிந்தவரையில் தவிர்த்து விடுவேன். மொகிதின் இதுவரை இரண்டு முறை என்னைச் சந்தித்துள்ளார்.

Tan-Sri-Muhyiddin-Yassin1மொகிதின் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அதிருப்திகளையும், மனக் குறைகளையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவற்றை நான் கேட்டுவிட்டு எனக்குள் வைத்துக் கொள்வேன். நான் பிரதமரையும் சந்தித்திருக்கின்றேன். ஆனால், அவரிடமும் அரசியல் பேசுவதைத் தவிர்த்து விடுவேன். அரசியல்வாதிகளே அரசியலை கையாளட்டும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். பிரதமருக்கு எனது ஆலோசனை தேவைப்பட்டால் ஒரு நண்பன் என்ற முறையில் நான் தயாராக இருக்கின்றேன்.

ஜோகூர் மாநிலக்காரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவதில்லை

ஒருவர் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவரா என்பது மட்டும் எப்போதுமே ஒரு பிரச்சனையாக எழுந்ததில்லை. ஆம்! நான் வெளிப்படையாக பேசுபவன்தான். எனது மனதில் பட்டதை நான் பேசுகின்றேன். எனது செய்தி மக்களுக்கு சென்று சேர்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனது அரண்மனை நிர்வாகம், பல தலைவர்களும் என்னைப் பார்க்க நேரம் ஒதுக்குகின்றது. இவர்கள் என்னைச் சந்தித்துவிட்டுச் செல்வதால் இவர்களின் தலைமைத்துவத்தை நான் அங்கீகரிப்பதாக அர்த்தமாகாது. அவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள். ஆனால் அரண்மனையின் நற்பெயரை இவர்கள் கெடுக்கவோ, தவறாகப் பயன்படுத்தவோ கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

நான் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன். ஆனால் அதற்காக ஜோகூர் மாநிலத்தவன் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை ஆதரிக்க மாட்டேன். மக்களும் எனது நடவடிக்கைகளை வைத்து அதுபோன்ற முடிவுகளைச் செய்யக் கூடாது.

பிரதமர் பகாங்கைச் சேர்ந்தவர். இருந்தாலும் இந்த மாநிலத்தின் மேம்பாட்டு நிலவரங்கள் குறித்து அடிக்கடி எனக்குத் தெரிவித்து வந்திருக்கின்றார். அவரது அதிகாரபூர்வ சந்திப்புகள் குறித்து பத்திரிக்கைகள் விரிவாக செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் அதே வேளையில் எங்களுக்குள் அமைதியான, அதிகாரபூர்வமற்ற சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன.

-செல்லியல் தொகுப்பு