கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் தனது நீக்கம் செல்லாது என்றும் அதன் காரணமாக மஇகா மீதும், அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மீதும் வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
நேற்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரமணன் இந்த விவரங்களை வெளியிட்டார்.
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரமணன், ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்ரமணியம், கலை ஆகியோர்…
மஇகா சட்டவிதிகளின்படி, தற்போதைய நடப்பு மஇகா மத்திய செயற்குழுவுக்கு நியமிக்கப்பட வேண்டிய 9 நியமன உறுப்பினர்களில் இருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த மத்திய செயற்குழு முழுமை பெறாத ஒன்று என்றும், அதன் காரணமாக அந்த மத்திய செயற்குழு தன்னை நீக்க எடுத்த முடிவு செல்லாது என்றும் இரமணன் தெரிவித்துள்ளார்.
ஒரு சட்டவிரோதமான, மத்திய செயற்குழுவுக்கு தலைமை தாங்குவதால், தன்னை நீக்குவதற்கு சுப்ராவுக்கு அதிகாரம் இல்லை எனவும் இரமணன் வாதாடியுள்ளார்.
பழனிவேலுவை நீக்க சுப்ரா திட்டம் தீட்டினார்
மேலும் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில், பழனிவேலுவின் தலைமைத்துவத்திற்கு எதிராக சுப்ரா கட்டம் கட்டமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் இரமணன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அதற்கு சான்றாக டாக்டர் சுப்ரா அனுப்பியதாகக் கூறப்படும் சில குறுஞ் செய்தி பரிமாற்றங்களையும் இரமணன் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டிருக்கின்றார்.
அத்தகைய குறுஞ்செய்தி ஒன்றில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் மனைவிக்கு எதிராக சுப்ரா வெளியிட்டதாகக் கூறப்படும் குறுஞ்செய்தி ஒன்றையும் இரமணன் சுட்டிக் காட்டியுள்ளார்.
பதவி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்வாரா?
இரமணன் பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி சுப்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளதால், தனது உறுப்பிய நீக்கம் குறித்த மேல் முறையீட்டை மஇகா தலைமையகத்திற்கு சமர்ப்பிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மஇகா அமைப்பு விதிகளின்படி, உறுப்பிய நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் 14 நாட்களுக்குள் மத்திய செயலவைக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும் என அந்த அமைப்பு விதிகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு செய்யாவிட்டால் அவரது உறுப்பிய நீக்கம் மீதான மத்திய செயலவையின் மறு ஆய்வு இல்லாமல் அந்த உறுப்பிய நீக்கம் நிரந்தரமாகிவிடும்.