Home Featured நாடு “நஜிப் ஒதுங்கிக் கொண்டு, 1 எம்டிபி மீது விசாரணை நடைபெற்றால்தான் பாஸ் ஒத்துழைக்கும்” – துவான்...

“நஜிப் ஒதுங்கிக் கொண்டு, 1 எம்டிபி மீது விசாரணை நடைபெற்றால்தான் பாஸ் ஒத்துழைக்கும்” – துவான் இப்ராகிம்

521
0
SHARE
Ad

pas-umno-logo-கோலாலம்பூர் – அம்னோவுடன் பாஸ் ஒத்துழைக்கும் என்றும், தேசிய முன்னணியிலும் மீண்டும் சேரலாம் என்றும் ஆரூடங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் விரைவில் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், பாஸ் கட்சியின் துணைத் தலைவரான துவான் இப்ராகிம் துவான் மான் (படம்) பாஸ்-அம்னோ இணைப்பு தொடர்பாக சில கடுமையான விமர்சனங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.

Tuan Ibrahim-Tuan Manஹாடி அவாங் இதுவரை 1எம்டிபி விவகாரம் குறித்து நஜிப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. ஆனால் துவான் இப்ராகிமோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற அம்னோ உண்மையிலேயே தீவிரமாக விரும்பினால், முதலில் நஜிப் தனது பதவியிலிருந்து விலகி ஒதுங்கிக் கொண்டு, 1எம்டிபி மீதான சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அத்துடன் ஏழைகளுக்கு மேலும் கூடுதலான சுமையை ஏற்படுத்தும் 6 சதவீத பொருள்சேவை வரித் திட்டத்தை நஜிப் இரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஸ் கட்சியின் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலத்திற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு மீதிலான உரிமத் தொகையை (ராயல்டி) மத்திய அரசாங்கம், கிளந்தான் மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் துவான் இப்ராகிம் நிபந்தனை விதித்துள்ளார்.

அம்னோ – பாஸ் ஒத்துழைப்பு தொடருமா?

najibதுவான் இப்ராகிமின் இந்த கடுமையான நிபந்தனைகளைத் தொடர்ந்து அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான ஒத்துழைப்பு பேச்சு வார்த்தைகள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அம்னோ-பாஸ் இரண்டுமே தற்போது இக்கட்டான அரசியல் சிக்கலில் இருந்து வருகின்றன. அதிலிருந்து மீள வேண்டுமானால், இரண்டுமே இணைந்தால்தான் அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

சீனர்களின் வாக்குகளை இழந்தது, 1எம்டிபி விவகாரம், நஜிப்பின் 2.6 பில்லியன் நன்கொடை, மொகிதின் யாசின்-ஷாபி அப்டால் நீக்கத்தால் கட்சியில் எழுந்துள்ள எதிர்ப்பு அலை ஆகியவற்றால் பெரும் பாதிப்படைந்துள்ள அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து, மலாய்க்கார வாக்குகளை பெருமளவில் பெற்றால்தான் அடுத்த பொதுத் தேர்தலில் வெல்ல முடியும் என்ற நிலைமையில் தற்போது இருக்கின்றது.

21 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஸ் கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி அமானா ராயாட் என்ற புதிய கட்சி கண்டதால் பாஸ் தற்போது பிளவு கண்டிருப்பதோடு, பக்காத்தான் ராயாட் கூட்டணி முறிந்திருப்பதாலும் அந்தக் கட்சிக்கு தற்போது ஒரு புதிய அரசியல் எழுச்சியும், உத்வேகமும் தேவைப்படுகின்றது. அந்த அரசியல் உத்வேகம் அம்னோவுடன்  இணைவதால் பாஸ் கட்சிக்கு ஏற்படுமா அல்லது அம்னோவில் இணைவதால் மேலும் எதிர்ப்புகளைச் சந்தித்து, பாஸ் மேலும் பலவீனமடையுமா என்ற அரசியல் ஆரூடங்களும் முளைத்திருக்கின்றன.

இந்த சூழலில்தான் துவான் இப்ராகிமின் கருத்துகளால் அம்னோ-பாஸ் இணைப்பு பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் காணுமா அல்லது முறிவடையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.