கோலாலம்பூர் – அண்மையில் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும், மலேசிய மண்ணின் மைந்தர்களின் தயாரிப்பில் வெளியான ஜகாட் திரைப்படத்திற்கு, மலேசிய நாம் தமிழர் இயக்கம் எதிரிகள் அல்ல என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வியூக இயக்குநர் பாலமுருகன் வீராசாமி (படம்) தெரிவித்துள்ளார்.
“நல்ல கருத்து, தமிழர் மேம்பாட்டிற்கு ஊக்குவிக்கும் வகையில் எந்த ஒரு மண்ணின் மைந்தர்களின் திரைப்படங்களுக்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு. ஆனால் அதே சமயத்தில், தமிழர் மொழி, சமயம் பண்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருத்தல் கூடாது. அந்த அடிப்படையில் ஜகாட் என்ற சொல் தமிழ் அல்ல, அது சமஸ்கிருத மொழியிருந்து பிறந்த ஒரு மலாய்ச் சொல்” என்று விளக்கப்படுத்தியுள்ளார் பாலமுருகன்.
“படத்தின் கருவே முக்கியம், படத்தின் பெயரோ மொழியோ முக்கியமில்லை என்று கூறுவது அறிவாந்த சிந்தனையில்லை. இன்று, ஜகாட் திரைப்படம் தமிழ் ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்துவதற்கு காரணம், மலேசிய தமிழர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆக, இப்படத்தையும் மலேசிய தமிழர்களையும் இணைப்பது இனமும் மொழியுமே. அப்படிப்பட்ட மொழிக்கு நாம் விசுவாசமாக இருந்து சரியான தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது திரைப்பட குழுவினர்களின் கடமையும் கூட. இப்படத்தை பெரும் பொருட்செலவில் நல்ல கருத்தோடு திட்டமிட்டு தயாரித்திருக்கும் படக்குழுவினர்கள், மொழி விவகாரத்தில் கவனம் செலுத்தாது ஏன்?” என்று பாலமுருகன் வினவினார்.
“கடந்த காலங்களில், நம் மொழியில் பிற மொழிகளை கலந்து பேசியதால், புது மொழி உருவாகி புது இனமே உருவெடுத்துள்ளது. இதனால், அன்றாட பேச்சு வழக்கில் பிற மொழி வட சொற்கள் இயல்பாகி, நம் தமிழ் மொழி சொற்களை மறக்கிறோம். எதிர்காலத்தில் ஜகாட் எனும் சொல்லும் தமிழ்ச் சொல்லாகும்.” என்றும் பாலமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“உதாரணம், மிளகாய்ச்சாறு – ரசமானது, அப்பம் – தோசையானது , மகிழ்ச்சி – சந்தோசமானது, பற்றியம் – விசயமானது, இதில் இன்னும் பல வட சொற்களை சொல்லிகொண்டே போகலாம் நம் அன்றாட வாழ்க்கையில்…இன்று பல மலேசியத் தமிழர்கள் அன்றாட வாழ்க்கையில் பிற மொழிகளை கலந்து பேசுவதும் தமிழ் என்றுதான் அறியாமையில் உள்ளனர். மலேசியாவில் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருக்கையில், அவர்களை மதித்து, அவர்களின் ஆலோசனைக்கேற்ப படத் தலைப்பை வைத்திருந்தால், ஜகாட் திரைப்படத் தலைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்காது” எனவும் பாலமுருகன் சுட்டிக் காட்டினார்.
“அதேவேளையில், இப்படத்தின் நல்ல கருவுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறது” என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வியூக இயக்குனரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.