Home நாடு சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் கடும்...

சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் கடும் எதிர்ப்பு

983
0
SHARE
Ad

ஷா ஆலாம் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60  வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இரத்து செய்திருப்பது தவறான முடிவு என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ கலைமுகிலன் தெரிவித்தார்.

“இறப்பு என்பது எதிர்பாராமல் நடைப்பெறும் ஒரு நிகழ்வாகும், நம்மிடையே பணம் இருக்கலாம் இல்லாமலும் இருக்க கூடும், எதுவாயினும் அந்த சூழ்நிலையை குடும்ப உறுப்பினர்கள் சமாளித்தாக வேண்டிய நிலையில், சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ரயாட் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிமுகம் செய்த 2500 ரிங்கிட் இறப்பு நிதி பெரும் உதவியாக சிலாங்கூர் வாசிகளுக்கும், சிலாங்கூர் வாக்காளர்களுக்கும் அமைந்தது. ஆனால் இன்று அந்த திட்டத்தை இரத்து செய்து ,அதற்கு மாற்றாக வயதானவர்களுக்கு வருடத்திற்கு 100 ரிங்கிட்  மதிப்புள்ள பற்றுச் சீட்டு (கூப்போன்) வழங்குவது நியாயமற்றதாகும்” என்று கலைமுகிலன் வர்ணித்தார் .

செல்வச் செழிப்பு மாநிலம் – ஆனால் மக்கள் உதவி நிதிகள் நிறுத்தப்பட்டன

மலேசியாவில் உள்ள மாநிலங்களிலே சிலாங்கூர் அதிக சேமிப்பு கொண்ட அதாவது ஏறக்குறைய 2.8 பில்லியன் ரிங்கிட் கையிருப்பில் வைத்திருக்கும் மாநிலமாகும். சுருக்கமாக சொன்னால் ஒரு செல்வச் செழிப்பான மாநிலமாகும். மேலும் 3 தவணைகள் சிலாங்கூர் அரசின் மேல் சிலங்கூர் மக்கள் தொடர் நம்பிக்கை வைத்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியதற்கு சிலாங்கூர் அரசு மேலும் பயனான திட்டங்களை அதிகரித்திருக்க வேண்டுமே தவிர திட்டங்களை குறைத்திருக்க கூடாது .

#TamilSchoolmychoice

இந்த திட்டமின்றி தாவாஸ் (TAWAS) அமைப்பு பிறந்த குழந்தைகளுக்கான சேமிப்பு நிதி, இளைஞர்களுக்கான திருமண நிதிகளையும்  சிலாங்கூர் நிறுத்தியுள்ளது என்ற தகவலையும் கலைமுகிலன் (படம்) வெளியிட்டார்.

மேலும் , சிலாங்கூர் அரசு வழங்கவிருக்கும் 100 ரிங்கிட்டை ஒரு காப்புறுதித் திட்டத்தில் சிலாங்கூர் அரசு பணத்தை செலுத்தினால், அது சம்பந்தப்பட்ட நபர் இறந்த பிறகு அவருக்கு 10,000 ரிங்கிட் கிடைப்பதற்கான திட்டமாக உருமாறும் என்றும் சிலாங்கூர் அரசுக்கு மீரா கட்சியின் பொது செயலாளர் திரு கண்ணன் முன் மொழிந்தார் . இப்படி பல திட்டங்களை அரசு சிந்தித்து சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் – மாறாக நடப்பு திட்டத்தை நிறுத்துவது வேதனையான சம்பவம் என்றும் கண்ணன் விமர்சித்தார் .

மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி எடுத்த இம்முடிவு மாநில  ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா ? அல்ல மந்திரி பெசார் மற்றும் யாவாசு என்ற நிறுவனத்தின் சொந்த முடிவா என்றும் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் ஆலோசகரும், தமிழர் குரல் தலைவருமான பொன் ரங்கன் கேள்வியெழுப்பினார்.

சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு இந்தியப் பிரதிநிதி தேவை

வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் வாழும் திரெங்கானு மாநிலத்தில் கூட மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக தமிழர் இருக்கும் பொழுது, சிலாங்கூர் மாநிலத்தில் 22% வாழும் தமிழர்களுக்கு மந்திரி பெசாரின் அதிகாரியாக ஒரு தமிழர் இல்லாதது ஏன் என்று பொன் ரங்கன் வினவினார் .

அதே போல் யாவாசு என்ற சிலாங்கூர் மாநில நிறுவனம்தான் இதுபோன்ற சலுகைகளை நிர்வகிக்கிற பொறுப்பில் உள்ளது. இதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கண் பேன் உள்ளார், அந்நிறுவனத்திலும் ஏன் தமிழர் யாருமில்லை என்ற ஆதங்கத்தை பொன் ரங்கன் முன் வைத்தார்.

இது தொடர்பாக மலேசிய நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள் சிலாங்கூர் அரசிடமும், பிரதமர், மற்றும் துன் டாயிமிடம் நினைவுக்கடிதம் வழங்க தயார் செய்துள்ளதாக பொன் ரங்கன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ் கட்சியின் ஆதரவு பேரவையிலிருந்து பாரதிதாசன், டைமண்டு கல்வி சேவை மையத்தின் தலைவர் ரகுநாதன், தமிழன் டுடே தலைவர் சான், செரண்டா தமிழ்ப்பள்ளியை காப்போம் நகர்விலிருந்து ஜீவா, பி.கே.ஆர் உறுப்பினர் ஏழுமலை , சமூக ஆர்வலர் தர்மராசு மற்றும் மலேசிய நாம் தமிழர் இயக்க இளைஞர்கள் கலந்து சிலாங்கூர் மக்கள் வாழ்வாதார நலனுக்காக எதிர்ப்பை பதிவு செய்தனர் .

சிலாங்கூர் அரசு இந்த திட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் கலைமுகிலன் தெரிவித்தார்