ஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பேராக் சட்டமன்றத்தின் சபாநாயகர்களாக நியமிக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. 2008-இல் அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணி தொடக்கி வைத்த இந்த வழக்கம் பின்னர் தேசிய முன்னணி அரசாங்கத்திலும் தொடர்ந்தது. தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கத்திலும் இந்த வழக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பேராக் மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் பக்காத்தான் ஹரப்பான் அரசு மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக வழக்கறிஞரான மணிவண்ணனை நியமிக்க வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுப்பதாக இயக்கத்தின் தேசிய வியூக இயக்குநர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
மணிவண்ணன் 14-வது பொதுத் தேர்தலில் பேராக் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கடந்த பொது தேர்தலில் மக்கள் திரட்சியில் மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கி, 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்தி பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதில் தமிழர்களின் 85% பங்களிப்பு அளப்பரியது என்றும் நாம் தமிழர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய முன்னணி ஆட்சியின் போது, எதிர்க்கட்சி பிரதிநிதியாக பல மக்கள் நலப் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் துணிச்சலாகக் குரல் கொடுத்த காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்க் கல்விக்கு கேடு விளைவிக்க தேசிய முன்னணி அரசு கொண்டு வந்த *டிஎல்பி* என்னும் இருமொழித் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இறுதி வரை எதிர்த்தவருமான மணிவண்ணன் சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் நாம் தமிழர் இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
“மணிவண்ணன் நாடாளுமன்றத்தில் திறமையாகவும் துணிச்சலாகவும் பேசிய தலைவர்களில் ஒருவர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தான் சட்டமன்றத்தில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தாலும், அவரின் சேவைகள் முடங்கி விடக் கூடாது. அவரது சேவை மேலும் தொடர பேராக் மாநில சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அவருக்கு சபாநாயகர் பணி வழங்குவதன் மூலம் பேராக் மாநில மக்கள் அதிகமான நன்மைகள் பெற முடியும்” என தாங்கள் நம்பிக்கை கொள்வதாக மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.