சென்னை – சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தை விமர்சிக்கப் போய், ராதிகா வெளியிட்ட டுவிட்டர் பதிவு, ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பி உள்ளது.
ராதிகா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை நாளை செல்ஃபி எடுக்கும், குளியல் அறையில் பாட்டுப் பாடும் உங்களில் ஒருவருக்கும் வரலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் அவர், “நடிகர் கமல்ஹாசனை, நிதி அமைச்சர் விமர்சித்தபோதும் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், “சிம்புவுக்காக விமான நிலையங்களில் கண்காணிப்பா? நாட்டில் பற்றி எரியும் பல விசயங்கள் உள்ளன. இதுதான் முக்கியமா? கற்பழித்தவர் சுதந்திரமாக வெளியே உள்ளார். ஏன் இந்தப் பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது? ஒருவேளை கவனத்தைத் திசை திருப்ப இப்படி செய்யப்படுகிறதா?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை மறைப்பதற்காகவே சிம்பு பலிகடா ஆக்கப்பட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ராதிகாவின் இந்த பதிவு அரசுக்கு எதிராக இருப்பது போல் தோன்றுவதால், அதிமுக கூட்டணியில் இருக்கும் சரத்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.