லாகூர் – ஐரோப்பிய தலைவர்கள் நட்பு ரீதியாக பழகி வரும் நிலை, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு எப்போது ஏற்படும் என்று, இரு நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்த நாள் வந்துவிட்டதற்கான அடையாளம் தான் மோடியின் பாகிஸ்தான் பயணம். இரு நாட்டுத் தலைவர்களும் மிக கவனமாக கையாண்ட அணுகுமுறை, இன்று மிகப் பெரிய மாற்றத்திற்கான அடிப்படையாகி உள்ளது.
மோடியை விமான நிலையத்திற்கே சென்று நவாஷ் ஷரிப் வரவேற்றதும், நாடு திரும்புகையில் உடன் இருந்து அனுப்பி வைத்ததும் நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி இருவரும் இணைந்திருந்த 80 நிமிடங்கள், இந்திய-பாக் நட்பின் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நவாஸ் ஷரிப் பேத்தியின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஷரிப் அணிந்திருந்த பிரத்யேக தலைபாகை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அது தொடர்பாக விசாரிப்புகள் நடந்த போது தான், இளஞ்சிவப்பு நிற அந்த ராஜஸ்தானி தலைப்பாகையை இந்தியப் பிரதமர் மோடி, ஷரிப்பிற்கு பரிசளித்தார் என்பது தெரிய வந்தது. மோடி அளித்த பரிசினை கம்பீரமாக அணிந்து கொண்டு, ஷரிப் வளம் வந்தது, மோடியின் மீது அவர் வைத்துள்ள மதிப்பைக் காட்டுகிறது என அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
ஷரிப் மட்டுமல்லாது அவரது தாயாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பல்வேறு பரிசுகளை அளித்த மோடி, “நான் இனி இங்கு அடிக்கடி வருவேன் என்று கூற, உள்ளம் மகிழ்ந்த நவாஸ் ஷரிப், “தாராளமாக. இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று கூறியுள்ளதும் தெரிய வந்துள்ளது.