கோலாலம்பூர் – தனது மகன் துன் லக்ஷமணா துங்கு அப்துல் ஜாலில் மறைவு குறித்து ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நேற்று ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், மிகவும் உருக்கமாக சில தகவல்களைக் கூறியுள்ளார்.
இது குறித்து ஜோகூர் சுல்தான் கூறியிருப்பதாவது:-
“என்னையும், எனது குடும்பத்தினரையும் புரட்டிப் போடும் ஒரு வருடமாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலேயே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முடிசூட்டு விழா தான் அதிக மகிழ்ச்சியை அளித்தது. நவீன ஜோகூர் வரலாற்றில் நான் மாநிலத்தின் 5 வது சுல்தானாக அறிவிக்கப்பட்டேன். கடைசியாக 55 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த முடிசூட்டு விழா நடத்தப்பட்டது.”
“எனது மனைவி ராஜா சாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் அவர்களின் முடிசூட்டு விழாவின் போது, பெர்மாய்சூரி ஜோகூர் (Permaisuri Johor) பட்டமும் வழங்கப்பட்டது. அது இன்னொரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக அமைந்தது”
“கடந்த அக்டோபர் மாதம், என்னுடைய மூத்த மகன், ஜோகூர் துங்கு மாஹ்கோட்டா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், புவான் காலீடா புஸ்டாமாமை மணம் முடித்தார். ஆனால் இந்த நிகழ்வுகளெல்லாம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கூட, துங்கு ஜாலில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த போது, அவருடன் இணைந்து மொத்த குடும்பமும் போராடினோம்.”
“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுலா சென்ற நேரத்தில், தனக்கு அந்நோய் இருப்பதை அவர் அறிந்து கொண்டார். இரும்பைப் போன்ற மனிதர். அவர் உண்மையான வீரர். அந்நோய்க்கு அவர் மருத்துவம் பார்த்த நேரத்தில், அவர் எந்த அளவு வலியை அனுபவித்தாரோ? அதே அளவு வலியை நாங்களும் உணர்ந்தோம்.”
“எல்லாவற்றையும் கடந்து நாங்களும் சாதாரண மனிதர்கள் தானே. ஜோகூரில் இருக்கும் மற்ற தந்தைகளைப் போல் தான் நானும். ஒவ்வொரு முறையும் என்னுடைய மகன் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு என் இதயம் நொறுங்கியது. குறிப்பாக அவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்த நேரத்தில். இருந்தாலும், அவருக்கு கடைசி வரையில் தைரியம் கொடுத்தேன்.”
“ஆனால், என்னுடைய மனைவி தனது இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி மலேசியர்களிடம் பகிர்ந்து கொண்டார். சில சமயம் நாம் திட்டமிடும் படி எல்லாமே நடக்காது. அது எப்படிப்பட்ட வலிமிகுந்ததாக இருந்தாலும், அதை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.”
“அவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் விலைமதிப்பற்ற நினைவுகள்.”
“விதி மற்றும் தலையெழுத்தை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் அல்லாவிடம் காரணம் உள்ளது. நான் இந்த நேரத்தில் எல்லா மலேசியர்களுக்கும், குறிப்பாக ஜோகூர் மக்களுக்கும், இனம், மதம் பேதமின்றி எனது மகனின் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”
“இன்னும் கூட மக்கள் அரச கல்லறைக்கு வந்து இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எனது அடிமனதில் இருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” – இவ்வாறு ஜோகூர் சுல்தான் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி, ஜோகூர் இளவரசர் துங்கு ஜாலில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.