சென்னை – பத்திரிக்கையாளர்களின் கூட்டம் என்றும் பாராமல், தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து, செய்தியாளர்களைக் காறி உமிழ்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயல், மட்டகரமான அரசியலின் சாட்சியாகவே பார்க்க முடிகிறது. செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிப்பதும், தனக்கு கூற விருப்பம் இல்லாத கேள்விகளை, ‘பதில் கூற விரும்பவில்லை’ என்று தவிர்ப்பதும் தான் ஒரு அரசியல் தலைவரின் அடிப்படை நாகரிகமாக இருக்க முடியும்.
இந்த நாகரிகம், அரசியல்வாதிகளை உயர்த்திப் பிடிக்கும் அடிப்படை வாக்காளர்களுக்குமே பொருந்தும். இப்படி இருக்கையில், 2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? என்ற சாதாரண கேள்வியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு தலைவரை நம்பி, எப்படி வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்?
பத்திரிக்கையாளர்கள் அவமதிக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும், சக மனிதர்களின் சுயமரியாதை, கேலிக் கூத்தாக்கப்பட்டிருப்பது தான் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் விஜயகாந்த், பொது இடங்களில் அளவுக்கு மீறி நடந்து கொண்டாலும், மனதில் ஒன்று வைத்து புறம்பேசத் தெரியாத வெள்ளந்தி மனிதராகவே மனதின் ஓரத்தில் இருந்து வந்தார்.
மாறி மாறி ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து, அதனால் மனதில் மலை போல் குவிந்த ஏமாற்றங்கள், இவரை அடுத்த அரசியல் எதிர்காலமாக நம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டன. இப்படி வாக்காளர்கள் மனதில், வெகு விரைவில் நட்சத்திர அந்தஸ்துடன் இடம் பிடித்த விஜயகாந்தின், நேற்றைய செயல் அநாகரிகத்தின் உச்சம். நாகரிக உலகில், சக மனிதர்களை இதைக் காட்டிலும் அவமரியாதையாக நடத்த முடியாது என்றே தோன்றுகிறது.
இவரின் அடுத்த முதல்வர் கனவை நனவாக்க, இவருடன் சேர்ந்து பயணித்த இவர் கட்சியின் தொண்டர்களுக்கும், இவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்பிய லட்சோபலட்சம் வாக்காளர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. வழக்கமாக தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பாலும் எதிர்கட்சிகளின் குரல் கேட்காது. அதற்கு மிக முக்கியக் காரணம், சட்டமன்றத்தில் பெரும்பாலும் எதிர்கட்சிகளின் இருக்கைகள் காலியாவே இருக்கும்.
ஒருவேளை விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் (கற்பனையில்), இந்த நிலை மேலும் மோசமாகிவிடுமே. கேள்வி கேட்கும் யாருக்கும் இது தான் பதில் என்றால், சுயமரியாதையை அடமானம் வைத்து விட்டு, யார் தான் கேள்வி கேட்க முன்வருவார்கள். நல்லவேளையாக விஜயகாந்தின் நேற்றைய செயல், 2016 தேர்தலுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் சமூகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சார்பாக, அவரின் செயலுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெரும்பாலும் சிரிப்பை வரவழைக்கும் விஜயகாந்தின் காணொளிகளில், நேற்றைய காணொளி கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த காணொளியைக் கீழே காண்க:
– சுரேஷ் சிவசங்கரன்