Home Featured நாடு “பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து

“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து

721
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தற்போது நடைபெற்று வரும் மஇகா சர்ச்சைகள் குறித்து இதுவரை கருத்து ஏதும் கூறாமல் தவிர்த்து வந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இன்று சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

samyvellu“ஓர் அரசியல் தலைவர் வெற்றியடைய வேண்டுமானால், மற்றவர்கள் முன்னால் அவருக்கு பணிவு வரவேண்டும். அப்போதுதான் அவர்களை அவரால் வெற்றி கொள்ள முடியும்” என்றார் சாமிவேலு.

தெற்காசிய நாடுகளுக்கான உட்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதருமான  சாமிவேலு, தலைவர்கள் தனது சொந்த பதவியைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், தனக்கு எதிரானவர்களிடம் கூட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருந்து வரவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

#TamilSchoolmychoice

“நான் மஇகா தலைவராக 1979ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற போதும், இப்போது டாக்டர் ச.சுப்ரமணியம் எதிர்நோக்குவதைப் போன்றே நானும் பிரச்சனைகளைச் சந்தித்தேன். அப்போது, மாநிலம், தொகுதி, கிளை அளவில் எல்லா நிலைகளிலுமான தலைவர்களோடு தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்” என்றும் சாமிவேலு கூறினார்.

Datuk-Seri-Dr-S.Subramaniam“ஒவ்வொரு தலைவரின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மனக் குறைகளை செவிமெடுத்துக் கேட்டேன். இவ்வாறுதான் நான் அவர்களை வெற்றி கொண்டேன்” என்றும் சாமிவேலு தனது பழைய அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்தார்.

தங்களை விட மற்றவர்கள் மிக முக்கியம் என மஇகா தலைவர்கள் எப்போதும் நினைக்க வேண்டும் என்றும் சாமிவேலு அறிவுறுத்தினார்.

தற்போது கட்சியில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான சூழலைத் தணிப்பதற்கும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சுப்ரமணியத்திற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும் என்றும் சாமிவேலு தெரிவித்தார்.

MIC Logo 298 x 295“எல்லாவற்றையும் உடனடியாகத் தீர்த்து வைத்து விட முடியாது. நிலைமை சீரடைந்து சூடு தணிவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இப்போது கோபம் கொழுந்துவிட்டு எரிகின்றது. அது அடங்குவதற்கு அவகாசம் வழங்குங்கள்” என்றும் மஇகாவை 32 ஆண்டுகாலம் வழிநடத்திய சாமிவேலு தனது அலுவலகத்தில் இருந்து பேசிய போது இன்று குறிப்பிட்டதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்படும் என நம்புவதாகவும் கூறிய சாமிவேலு, முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் அடுக்கி வைத்துள்ள புகார்கள் குறித்து கருத்து ஏதும் சொல்ல மறுத்துவிட்டார்.

தான் அரசியலை விட்டு ஒதுங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இனியும் அமைதி காப்பதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறினார். “கட்சியில் நடக்கின்ற நிலைமைகளைப் பார்க்கும் போது எனது வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகின்றது” என்றும் முன்னாள் தேசியத் தலைவருமான சாமிவேலு கூறியுள்ளார்.