கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன்னாள் கணக்காய்வாளர்களான எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி ஆகியவை 1எம்டிபிக்கும் பெட்ரோ சவுதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கை குறித்து கேள்வி கேட்டதால் அவற்றின் கணக்காய்வு குத்தகைகள் இரத்து செய்யப்பட்டன என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீண்டும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அந்த இரண்டு கணக்காய்வு நிறுவனங்களையும் நீக்கியது நஜிப்தான் என்றும் வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. 2009இல் பெட்ரோ சவுதி நிறுவனத்துடனான வணிகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து கேள்விகள் எழுப்பியதாலேயே அந்த நிறுவனங்கள் நீக்கப்பட்டன என்றும் அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது.
“இந்த விவரம் எங்களுக்குத் தெரியும். காரணம், அரசாங்கக் கணக்குத் தணிக்கையாளரின் (ஆடிட்டர் ஜெனரல்) அறிக்கையில் இந்த ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன” என்றும் வால் ஸ்ட்ரீட், மலேசியாகினி பத்திரிக்கையுடன் நேற்று நடத்திய இணையம் வழியான பேட்டியில் தெரிவித்துள்ளது.
“ஏன் இந்த கணக்குத் தணிக்கை நிறுவனங்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டாலும், இதுவரை அவை இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை?” என்றும் வால் ஸ்ட்ரீட் கேள்வி எழுப்பியுள்ளது.
நஜிப் 1எம்டிபி ஆலோசகர்கள் வாரியத்தின் தலைவர் என்பதோடு, இந்த கணக்காய்வு நிறுவனங்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் நிதியமைச்சர் என்ற முறையில் அவருக்கு இருந்தது.
அரசாங்க முதலீட்டு நிறுவனம் என்ற முறையில் 1எம்டிபியின் ஒரே பங்குதாரராக நிதியமைச்சு இருந்து வந்தது.