புது டெல்லி – உலகம் முழுவதும் இந்த ஆண்டு 110 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 9 பேர் இந்தியர்கள். ஆசியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிகம். இப்படியான ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வை ‘ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ (Reporters without Borders) என்ற தன்னார்வ இலாபநோக்கமற்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் குற்றவியல் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் பற்றிய ரகசியங்களை வெளியிடும் புலனாய்வுப் பத்திரிக்கையாளர்கள் ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம், கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டது தான். இந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களில் 5 பேர் செய்தி சேகரிக்கும் இடத்திலேயும், 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவைத் தவிர மற்ற ஆசிய நாடுகளில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. அனைத்துலக நாடுகளைப் பொறுத்தவரை, சிரியாதான் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் பிரான்சும், பிரேசிலும் உள்ளன.