புத்ராஜெயா – இஸ்லாம் மதமாற்ற விவகாரங்கள் அனைத்தும் ஷரியா நீதிமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரங்களை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
பாலர் பள்ளி ஆசிரியை எம்.இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகள் ஒருதலைபட்சமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு பெறப்பட்ட சான்றிதழ்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்கத்தின் மேல்முறையீட்டில் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவில், நீதிக் குழுவில் தலைவரான பாலியா யூசோப் வாஹி மற்றும் படாரியா சகாமிட் ஆகியோர் பெரும்பான்மை முடிவையும், நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கர் இந்த விசாரணை சிவில் நீதிமன்றத்தின் சட்ட வரம்பிற்கு உட்பட்டது தான் என்ற எதிர் முடிவையும் எடுத்துள்ளனர்.
பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டு பெறப்பட்ட சான்றிதழை கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி, உயர்நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வீ செங் இரத்து செய்தார்.
எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேரா மாநில சமயத்துறை, மாநில, கூட்டரசு அரசாங்கங்கள், மதமாற்றப் பதிவாளர், கல்வியமைச்சு, இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரித்வான் அப்துல்லா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.