கோலாலம்பூர்: எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவை கைது செய்து, அவரது இளைய மகள் பிரசன்னா டிக்சாவை மீட்க காவல் துறை மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கும் சத்தியப்பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காவல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத் துறை அலுவலகத்திற்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் வழங்குவதாக நீதித்துறை ஆணையர் பூபிந்தர் சிங் தெரிவித்தார்.
இது 2014- ஆம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய 79 சத்தியப்பிரமாண பத்திரங்களையும் உள்ளடக்கியது என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.
2014 உயர்நீதிமன்ற உத்தரவு குழந்தையை கண்டுபிடிக்கும் வரை நீதிமன்றத்திற்கும் இந்திராவிற்கும் ஒரு மாதத்திற்கு, ஒரு முறை தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது.
“இந்த உத்தரவு மே 2014 தேதியிடப்பட்டது. இப்போது அது டிசம்பர் 2020 ஆகும். அதாவது 79 சத்தியப்பிரமாண பத்திரங்கள் காவல் துறையால் தாக்கல் செய்யப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
காவல் துறைக்கு எதிராக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய இந்திரா, “இது பல ஆண்டுகளாக நாங்கள் குரல் கொடுத்து வரும் காவல் துறையின் தோல்வி. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை,” என்று கூறினார்.
அடுத்த நீதிமன்ற விசாரணை ஜனவரி 26- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.