புது டெல்லி – பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த விரும்பிய இந்திய அரசு, ஆபத்தான நேரங்களில் பெண்கள் எளிதாக காவல்துறையை உதவிக்கு அழைப்பதற்காக ‘பேனிக் பட்டன்’ (Panic Button) வசதியை திறன்பேசிகளில் ஏற்படுத்தித் தரும்படி செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டது. கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில், அந்நிறுவனங்கள் பேனிக் பொத்தான் வசதியை மேம்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான அறிவிப்பினை மத்திய குழந்தைகள், மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார். மிக விரைவில் இதற்கான பணிகளை செல்பேசி நிறுவனங்கள் தொடங்க இருப்பதாகவும் மேனகா தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதத்திற்குள், இந்த வசதி நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.