சிங்கப்பூர் – சிங்கப்பூரில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தைச் ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வருந்தத்தக்க நடத்தைக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள இஸ்ரேல் தூதரம், குறிப்பிட்ட அந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிறுக் கிழமை, இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த இளநிலை ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை மேசை தொடைக்கும் துணியாகப் பயன்படுத்தியது, ஊடகம் ஒன்றின் மூலம் தெரிய வந்தது.
தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது தெரிய வந்ததும், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம், கடுமையான கண்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், இஸ்ரேல் தூதருக்கு சம்மன் ஒன்றையும் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து தான், இஸ்ரேல் தூதரம் பகிரங்க மன்னிப்பு கோரியது.
இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் பொது இயக்குனர், குறிப்பிட்ட அந்த ஊழியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், இஸ்ரேல் மிகுந்த முனைப்புடன் இருக்கிறது. எங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்ரேல்-சிங்கப்பூர் இடையே இருக்கும் நெருக்கமான நட்புறவை பேணுவதாகவும், பிரதிபலிப்பதாகவும் இருக்கும்” என்று அறிவித்தது.
இஸ்ரேல் தூதரகம் கோரிய பகிரங்க மன்னிப்பை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் அமைச்சகம், குறிப்பிட்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்பதையும் அறிவுறுத்தி உள்ளது.