Home Featured நாடு விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாக்க கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை!

விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாக்க கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை!

682
0
SHARE
Ad

Vivekananda_Ashramகோலாலம்பூர் – நேற்று மாலை பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமத்தின் அறங்காவலர்களுக்கும், அதனைப் பாதுகாக்கக் கூடிய அமைப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சற்று நேரம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவேகானந்தா ஆசிரமத்தின் ஆதரவாளர்களும், பிரிக்பீல்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், ஆசிரமத்தின் அறங்காவலர்களை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர்.

விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவிருக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, அதன் அறங்காவலர்கள் நீதிமன்ற மறுஆய்வை நாடியிருப்பதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதோடு, 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது கோரிக்கையைத் தெரிவித்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா அசிரமத்தைப் பாதுகாப்போம் (Save Vivekananda Ashram Brickfields-SVAB) என்ற குழுவைச் சேர்ந்த வி.ஜி நெஹ்ரமான் கூறுகையில், ஆசிரமத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கவிருக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக அறங்காவலர்கள் நீதிமன்ற மறுஆய்வு மனுவைச் சமர்ப்பித்துள்ளனர். அதனை அவர்கள் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.

“பள்ளிகளுக்கு ஆதரவளிக்க ஏன் இங்கு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட வேண்டும்? பள்ளிகளுக்கு ஆதரவளிக்க வேறு எத்தனையோ வழிகள் உள்ளன.” என்று நெஹ்ரமான் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரியின் நிர்வாகியான ராஜ சிங்கம் கூறுகையில், “விவேகானந்தா பள்ளிகளுக்கு ஆதரவளிக்க அறங்காவலர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட வேண்டும் என்கின்றனர். அது தேவையேயில்லை. காரணம் அரசாங்கம் அப்பள்ளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. எனவே அப்பள்ளிகளுக்கு ஒரு சிறிய அளவிலான நிதியுதவிகள் தான் தேவைப்படுகின்றது. அதை இந்திய சமுதாயத்திடம் இருந்தே பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

“உதாரணத்திற்கு இந்திய சமுதாயத்தில் 200,000 மக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களிடமிருந்து தலா 20 ரிங்கிட் வசூல் செய்தால் கூட 4 மில்லியன் ரிங்கிட்டைப் பெறலாம். இன்னும் இது போல் நிதிதிரட்ட பல வழிகள் உள்ளன” என்றும் ராஜ சிங்கம் மலேசியா இன்சைடர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.