கோலாலம்பூர் – பல போராட்டங்களுக்குப் பிறகு பிரிக்பீல்ட்சில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமும் அதனைச் சுற்றியுள்ள நிலமும் பாரம்பரியச் சின்னமாக மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் தகவலை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதற்கு எதிராக ஆசிரமத்தின் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடை அரசாங்கம் நிராகரித்தது என்றும் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நஸ்ரி, “அது ஒரு பாரம்பரிய ஸ்தலமாக இருந்தாலும், அந்த நிலத்திற்கு உரிமையாளர் தான் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். அதேவேளையில், அவர்களுக்கு அரசாங்கம் சார்பில் எந்த ஒரு நிதியுதவியும் வழங்கப்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 96-ன் கீழ் ஆசிரம விவகாரத்தில் அரசாங்கம் இறுதி முடிவு எடுத்துள்ளது என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கு இத்துடன் முடிவுக்கு வருகின்றது என்றும் நஸ்ரி உறுதியளித்துள்ளார்.