சென்னை – கடந்த சில வாரங்களாக – வெள்ள நிலைமை, விஜயகாந்த் பேச்சுக்களினால் எழுந்த சர்ச்சை, கட்சிகளின் கூட்டணி – இப்படியாக பல விவகாரங்களிலும் அமைதி காத்து வந்த ஜெயலலிதா, 2016 புத்தாண்டு தொடங்குகின்ற வேளையில், நேற்று அதிமுக பொதுக் குழுவைக் கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தனது அதிரடிப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் உரையாற்றும் ஜெயலலிதா….
இன்று பிறக்கும் புத்தாண்டில் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது. பொதுக் குழுவில் 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவரது உரை திமுகவை நோக்கியே- அதிலும் கருணாநிதியையே மையமிட்டு இருந்ததால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களத்தில் ஜெயலலிதா முக்கிய எதிரியாகக் கருதுவது திமுகவைத்தான் என்பது தெளிவாகியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதிலும் மு.க.ஸ்டாலினைக் குறிவைத்தும் ஜெயலலிதா சில அரசியல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளார். இதிலிருந்து ஸ்டாலினையும் அவர் சுலபமாகப் புறந்தள்ளிவிட முடியாது என்பதை உணர்ந்து கொண்டுள்ளார் என்பது தெரிகின்றது.
நேற்றைய அதிமுக பொதுக் குழுவில் உரையாற்றும் ஜெயலலிதா….
தமிழ் நாட்டில் இளைஞர்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் பெருமளவில் கவர்ந்த அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் கட்டுவதும் அவரது பெயரால் மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான விருதுகள் வழங்கவிருப்பதும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதே வேளையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணிக் கட்சிகளுடன் இணைய தயாராக இருப்பதாகவும் கோடி காட்டியுள்ளார் ஜெயலலிதா.
இந்நிலையில் எந்தக் கட்சியுடன் அவர் கூட்டணி அமைப்பார், மக்கள் நலக் கூட்டணியை உடைத்து அதிலிருந்து சில கட்சிகளைப் பிரித்து அவர்களுடன் கூட்டணி அமைப்பாரா என்பது போன்ற கேள்விகளும் தமிழக அரசியலில் எழுந்துள்ளன.