சென்னை – தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக இடங்கள் பெற்று முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களின் ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில், 5176 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பில், “தமிழகத்தில் எந்தக் கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்? என்ற கேள்விக்கு, 33.9 சதவீதம் பேர் திமுக என்றும், 31.5 சதவீதம் பேர் அதிமுக தான் என்றும் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கும் தேமுதிக-விற்கு 14.4 சதவீதம் மக்களும், பாமக-விற்கு 9.9% சதவீத மக்களும், மதிமுக-விற்கு 9 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வருக்கான தகுதியும், திறமையும் கருணாநிதிக்கு தான் இருக்கிறது என அதிகம் பேர் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில், ஜெயாவிற்கு இரண்டாம் இடமும், ஸ்டாலின் மற்றும் விஜயகாந்திற்கு அடுத்தடுத்த இடங்களும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல், கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு “32.5 சதவீத மக்கள் நன்று என்றும், சொல்வதற்கு ஏதும் இல்லை என 25.8 சதவீத மக்களும், மோசம் என 39.3 சதவீத மக்களும் தெரிவித்துள்ளனர்” என அவர்கள் கூறியுள்ளனர்.