ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் 70 தமிழ்ப் பள்ளிகளில் சுமார் 2,000 மாணவர்கள் தற்போது 1-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
அவற்றில் எஸ்ஜெகே(டி) மாசாய் தமிழ்ப் பள்ளி மலாய் மாணவர் ஒருவரையும் இணைத்துக் கொண்டு கூடுதல் சிறப்போடு, இந்த ஆண்டைத் துவங்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட அப்பள்ளியில் 7 வயதுடைய 142 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுள் முகமட் அலிப் தால்ஹா லிசாம் என்ற மாணவரும் ஒருவர்.
கடந்த 1946-ம் ஆண்டு துவங்கப்பட்ட அப்பள்ளியின் முதல் மலாய் மாணவர் என்ற பெருமையையும் முகமட் அலிப் தால்ஹா பெற்றுள்ளார்.
இது குறித்து அப்பள்ளியின் பெற்றோர் ஆசியர் சங்கத் தலைவர் ஆர். கார்த்திகேசன் கூறுகையில், பள்ளியின் 70 ஆண்டுகால வரலாற்றில் முதல் முதலாக மலாய் மாணவர் ஒருவர் இங்கு பயிலவிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
“தமிழ்ப் பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கும் அவருக்கு இது ஒரு நல்ல கல்வி பயிலும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில் சக மாணவர்கள் மலாய் கற்கவும் உதவும் என்று நான் நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தாய் மொழியான மலாய் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்னொரு மொழியைக் கற்க அனுமதித்த அவரது பெற்றோரை மிகவும் பாராட்ட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கு இது ஒரு நல்ல உதாரணமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி (The Star)