Home One Line P1 ஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்!

ஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்!

1266
0
SHARE
Ad
மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவ மணிகளுடன் ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம்

மாசாய் (ஜோகூர்) : ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக மாசாய் தமிழ்பள்ளியின் மாணவச் செல்வங்கள் பல நாடகப் போட்டிகளில் முக்கியமாக அனைத்துலக நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டு மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஹாங்காங் சென்று 2 விருதுகளை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தது அனைவரும் அறிந்த ஒன்றே. 2018-இல் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் முதல் இடத்தை வென்று மலேசியாவுக்கே பெருமைச் சேர்த்த பள்ளியும் இதுவே.

அது மட்டுமல்லாமல் ஜோகூர் கலைப் பிரிவு (Jabatan Kebudayaan dan Kesenian, Johor), டேவான் பகாசா டான் புஸ்தாக்கா மற்றும் கல்வி அமைச்சாலும் பாராட்டும் பெற்று நாடகத் துறையில் சாதனைப் பெற்ற தமிழ்ப்பள்ளியும் ஆகும்.

#TamilSchoolmychoice

இவ்வாண்டும் இப்பள்ளி மாணவர்கள் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக நாடகப் போட்டியில் பங்கெடுத்து தங்கத்தை வென்றுள்ளது தமிழ்ப்பள்ளிகளுக்கென கொண்டு வரப்பட்டிருக்கும் தனிப் பெருமையாகும். இப்போட்டியில் காணொளியை ஏற்பாட்டுக் குழுவினருக்கு முதலில் அனுப்ப வேண்டும். பிறகு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டச் சிறந்த நாடகப் படைப்பை இறுதிக் சுற்றுக்கு நேரடியாக ஹாங்காங்கிற்கே சென்று மாணவர்கள் படைப்பார்கள்.

இம்முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால், நேரடிப் படைப்பு தடைப்பட்டு விட்டது. எனினும், இப்போட்டியில் வழக்கம் போல  பல நாடுகளில் இருந்து காணொளிகள் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அனுப்பப்பட்டது.

அதில் மிகச் சிறந்த காணொளிகளுக்குத் தங்க விருது வழங்கியுள்ளனர் ஏற்பாட்டுக்குழுவினர். அவ்வகையில் மீண்டும் மாசாய் தமிழ்ப்பள்ளி அனைத்துலக நிலையில் தங்கம் வென்று வெற்றி வாகை சூடியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயன் மாதவன்.

இப்போட்டியில் மொத்தம் 16 மாணவர்கள் பங்கெடுத்தனர். இம்மாணவர்கள் அனைவரும் ஆண்டு 4, 5, 6 ஆண்டைச் சேர்ந்தவர்கள். தரமான படைப்புகளை உருவாக்க நாடகத்தில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட அவர்களின் திறமைகளைக் கண்டறிய பள்ளி அளவிலான நாடகத் தேர்வு நடத்துவோம். இந்த நாடகத் தேர்வில் கலந்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்வந்தனர். அதில் கண்டெடுத்த பல முத்துகளில் 16 பேர் இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள் திரிலோட்சனா நாயர் சிவா, சுபிட்ஷா பரமசிவா, நெவிலியன் மோரிஸ் ஜோசப், ரினேஷ்வன் இராஜேந்திரன், கயல்விழி குமார், ஹரன் பிரபாகரன், லிவாஷினி பாலசுப்பிரமணியம், ஶ்ரீ இராகவேந்திரா வாசுதேவன், பிரியாதர்ஷினி தேவேந்திரன், வைஷ்ணவி கணேஷ் ராவ், நித்திலா ராமநாதன், பார்வதி தியாகராஜன், வருணா லோகநாதன், கவிஷா குமார், யோகவர்ஷினி சரவணகுமார், அருளன் ஆறுமுகம் ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் சிறந்த படைப்பினை வழங்கி பெருமை சேர்த்துள்ளனர் என்கிறார் நாடகப் பொறுப்பாசிரியர் ஆசிரியை இரா.கஸ்தூரி @ மான்விழி. திரு ஓத்மான்,  ஆசிரியை நாகவள்ளி பழனிசாமி ஆகியோருடன் நாடகக் குழு ஆசிரியர்களின் பங்கும் இந்தத் தேர்வுக்கும் பயிற்சிக்கும் தூண்டுகோலாக இருந்தது என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் நமது பள்ளியின் படைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் எனக் கருத்தில் கொண்டு  நாடக உருவாக்கத்தை மாணவர்களுக்கு ஈர்க்கும் வகையில் சரியான கதையை ஆசிரியர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

அவ்வகையில் இம்முறை சற்று வித்தியாசமாக எங்கள் பள்ளி நாடகக் குழுவின் முன்னாள் மாணவரை இந்த நாடகத்தை இயக்க வாய்ப்பளித்தோம். இது மிகப் பெரிய சாதனையாகும். இப்பள்ளியின் முன்னாள் மாணவியான அருளினி ஆறுமுகம் ‘3 வரங்கள்’ என்ற இந்த அழகிய நாடகத்தை இயற்றி மாணவர்களுக்குப் பயிற்சியும் வழங்கினார்.

அருளினி இப்பள்ளியில் பயின்ற போது 2014-ஆம் ஆண்டு அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

நாடகத் துறையில் தரமிக்க மாணவர்களை மாசாய் தமிழ்ப்பள்ளி உருவாக்கியுள்ளது மிகவும் பெருமையைச் சேர்க்கின்றது என்கிறார் பள்ளியின் புறப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பெ. நாகேந்திரன்.

“இப்பள்ளியில் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பறியது. அவர்கள் தங்கள் குழந்தைகள் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். எங்கள் பள்ளிப் பெற்றோர்கள் பல வகையில் எங்களுக்கு உதவிகரம் புரிகிறார்கள். அனைத்து நாடக மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் இலவச உணவு, நாடகப் பயிற்சின் போது பெற்றோர்கள் வழங்குவார்கள். அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நாடக ஆடைகளைத் தைக்கவும், ஆபரணங்களைச் செய்யவும், முக ஒப்பனை, மேடை அலங்காரம், நாடகப் பொருள்கள் செய்யவும் உறுதுணையாக இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் இணைந்தே வேலைகளைச் செய்வோம். சில மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாதபோது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு உதவி செய்வது மனதுக்கு மிகவும் இனிமையாக அமைகிறது” என்கிறார் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு முரளி.

“மேலும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் என்றும் பக்கபலமாக இருந்து வருவது இப்பள்ளியின் வெற்றி இரகசியங்களில் ஒன்றாகும். தமிழ் மொழி நாடகங்களில் மட்டுமல்லாமல், மலாய் மொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பல மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் அனைத்துலக ரீதியில் பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டு இருக்கின்றனர் நமது மாணவர்கள். எல்லாவகையிலும் தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி” என்றும் பள்ளி ஆசிரியர்களின் சார்பில் ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் நன்றி தெரிவித்தார்.

வெற்றி பெற்ற மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவ மணிகளின் நாடகத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: