சியோல் – வட கொரியாவின் கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் செயற்கை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு காரணம், வட கொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனை தான் என தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தாங்கள் வெற்றிகரமாக ‘ஹைட்ரஜன்’ குண்டு சோதனையை நடத்தி உள்ளதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த முயற்சி தங்களின் அணுசக்தி வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, தென்கொரியாவின் சந்தேகத்தை உறுதிசெய்யும் வகையில் ஜப்பானும், நிலநடுக்கத்துக்கு வடகொரிய அணுஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதே காரணம் என்று கூறியுள்ளது.
இது குறித்து ஜப்பான் கூறுகையில், “வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் கடந்தகால சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. வடகொரியா நிலவரத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளது.