இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி சக்திவேல் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பல்வேறு காரணங்களால், நவம்பர் 6இல் நடைபெற்ற மஇகா மறு-தேர்தலில் பங்கேற்காத சுமார் 800க்கும் மேற்பட்ட மஇகா கிளைகளுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி, வேட்புமனுத் தாக்கலை மஇகா மத்திய செயலவை நிர்ணயித்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 342 கிளைகள் வேட்புமனுத் தாக்கல்கள் செய்து மீண்டும் அதிகாரபூர்வ கிளைகளாக மஇகாவில் இணைந்துள்ளன என்பதையும் சக்திவேல் நினைவூட்டினார்.
இந்த வாய்ப்பை கிளைகள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வாய்ப்பை ஜனவரி 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்க மத்திய செயலவை முடிவு செய்துள்ளது என்றும் சக்திவேல் மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி, கிளைகள் உறுப்பினர் சந்தாவைத் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கும் இறுதி நாள் என்பதால், இதுவரையில் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத மஇகா கிளைகள் தொடர்ந்து கட்சியில் நீடித்திருப்பதற்கான விண்ணப்பக் கடிதத்தை கூடிய விரைவில் மஇகா தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் கிளைகளுக்கு, கூடிய விரைவில் வேட்புமனுத் தாக்கல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மஇகா தலைமையகம் விரைவாகச் செய்து தரும்.
எனவே, மஇகா கிளைகள் இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு, மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், மஇகா தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் சக்திவேல் தெரிவித்துள்ளார்.