டெங்கில் – கடந்த அக்டோபர் மாதம் எஸ்ஜெகேடி டெங்கில் தமிழ்ப் பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பார்வையிட்ட பிறகு, அப்பள்ளியில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பள்ளியின் மின்சார கம்பிகளை சீர் செய்வது, இரண்டு தளங்களின் தரைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளைப் பட்டிலிட்ட நஜிப், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் கடந்த சில வாரங்களாக தேவையான மராமத்துப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்ததை அடுத்து, இன்று அப்பள்ளியை நஜிப் மீண்டும் பார்வையிட்டார்.
பள்ளியின் அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள் மற்றும் சந்திப்புக் கூடங்கள் ஆகியவற்றில் புதிய வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளதோடு, புதிய கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.
நவீன கல்வி கற்கும் சிறந்த மையமாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ள அப்பள்ளியில் தற்போது 280 மாணவர்களும், 24 ஆசிரியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேஸ்புக்.