Home Featured வணிகம் இந்தியாவில் செல்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டியது!

இந்தியாவில் செல்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டியது!

661
0
SHARE
Ad

phone1புது டெல்லி – இந்தியாவில் செல்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டி உள்ளது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. எனினும், இது வெறும் தொடக்கம் தான், தொலைத்தொடர்பில் இந்தியா மிகப் பெரிய மாறுதலை சந்திக்க இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்ட்னர் இந்தியாவின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் அம்ரேஷ் நந்தன் செல்பேசிகளின் இந்த எண்ணிக்கை குறித்து கூறுகையில், “இந்தியாவில் செல்பேசிகள் பில்லியனைத் தாண்டியது என்ற இந்த அறிவிப்பு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்த சில வருடங்களில் திறன்பேசிகளின் எண்ணிக்கை பல பில்லியன்களைத் தாண்டும். அது தான் மாற்றத்திற்கான அடுத்த அலை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 பில்லியன் செல்பேசிகள் என்ற இந்த எண்ணிக்கையை உலக அளவில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மட்டுமே எட்டி உள்ளன. சீனா கடந்த 2012-ம் ஆண்டே இந்த எண்ணிக்கையை எட்டி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை, சமீபத்திய நிறுவனங்கள் மலிவு விலையில் செல்பேசிகளை விற்பனை செய்யத் துவங்கியது முதல் செல்பேசிகளின் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கின.

#TamilSchoolmychoice

திறன்பேசிகளின் புழக்கத்தைப் பொருத்தவரையில் உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஏறக்குறைய 125 மில்லியன் பயனர்கள் திறன்பேசிகளை வைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை, அடுத்த சில வருடங்களில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை எட்டும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 2016-ல் இந்தியாவில் திறன்பேசிகளை வைத்திருப்போர் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும். அப்போது இந்தியா, அமெரிக்காவை முந்தி, சீனாவிற்கு அடுத்த இடத்தில் வந்துவிடும்.

திறன்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயும் உச்சத்தில் இருக்கிறது. ஆனாலும், நிறுவனங்களுக்குள் இருக்கும் போட்டி காரணமாக பயனர்களுக்கு அதிக சலுகைகளை கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அதற்கான சமீபத்திய உதாரணம் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 4ஜி அறிவிப்புகள்.

திறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தொழிற்புரட்சியில் இறங்கி இருப்பது குறித்து லுக்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில், “இந்தியாவின் மொபைல் புரட்சி தொடங்கி உள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைவரிடத்திலும் திறன்பேசிகளும், இணையமும் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.