சென்னை – சர்ச்சைக்குரிய பீப் பாடலை பாடிய சிம்பு, அதற்கு இசையமைத்த அனிரூத் ஆகிய இருவரும் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால், வழக்குகளை வாபஸ் பெறுவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி தெரிவித்து உள்ளார்.
சிம்பு, அனிரூத் மீது கோவையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கேட்டு சிம்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்பட்டிருந்தது.
அம்மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், “சிம்பு மீதான வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டுவரத் தேவையில்லை. கோவை பந்தயசாலை போலீஸ் முன் வருகின்ற 11-ம் தேதி சிம்பு நேரில் ஆஜராக வேண்டும். முன்ஜாமீன் தேவையெனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், நாமக்கலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, ”பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவும், அனிருத்தும் மன்னிப்பு கேட்டால் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.