பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை ஏந்திக் கொண்டு, போலியான வெடிகுண்டு பாதுகாப்பு கவசத்தை அணிந்திருந்த நபர் ஒருவர், அங்குள்ள காவல்துறை தலைமையகத்தின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தீவிரவாதிகள் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அலுவலகத்தைத் தாக்கி, பல உயிர்களைப் பலிவாங்கிய சம்பவத்தின் ஓராண்டு நிறைவு நாளில், அதன் தொடர்பில் புதிய தாக்குதல்கள் பாரிசில் நிகழலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சார்லி ஹெப்டோ தாக்குதல் நிகழ்ந்தது.
நேற்று பாரிசில் போலி வெடிகுண்டு கவசம் அணிந்திருந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்ட வளாகத்தைக் காவல் காக்கும் காவல் துறையினர்.
இந்நிலையில், இதுவரை அடையாளம் காணப்படாத ஒரு நபர் கையில் ஒரு கத்தியுடன் அல்லாஹூ அக்பர் என முழக்கமிட்டுக் கொண்டே, பாரிசின் வடக்குப் பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டிருக்கின்றார். அவர் கையில் ஐஎஸ் கொடியை ஏந்தியிருந்தார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். சார்லி ஹெப்டோ பத்திரிக்கைத் தாக்குதல் நடந்து சரியாக ஓராண்டு முடிந்துள்ளதால், அதற்காக புதிய தாக்குதல் நடத்தப்படுகின்றது என்ற அச்சத்தில் காவல் துறையினர் பதில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் அணிந்திருந்த கவசம் போலியானது என பின்னர் சோதனையில் தெரியவந்தது. கவசத்தோடு ஒரு சிறிய பையும், பசைஒட்டியும் (tape) இணைக்கப்பட்டிருந்தது. அந்த பசை ஒட்டியிலிருந்து ஒரு மின்சாரக் கம்பி (cable) வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அந்நபரின் உடலில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லையென்றாலும், சுட்டுக் கொல்லப்பட்ட பின், இயந்திர மனிதன் கருவி (robot) ஒன்றின் துணையோடு, அந்நபர் மீது வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இறுதி நிலவரம் – கொல்லப்பட்டவன் அடையாளம் காணப்பட்டான்
இறுதி நிலவரங்களின்படி, காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவனின் கைரேகை அடையாளங்கள் அவன் மொரோக்கா நாட்டின் காசபிளாங்கா நகரில் பிறந்த சால்லா அலி என காட்டுகின்றன. 2013ஆம் ஆண்டில் அவன் திருட்டு சம்பவம் ஒன்றில் தண்டனை பெற்றவன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளான்.