கோலாலம்பூர் – குமுதம் வார இதழில் தொடர்ச்சியாக வாராவாரம், 40 சிறுகதைகளை எழுதி புதிய தமிழ் இலக்கிய வரலாறு படைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் அடங்கிய நூல் ஏற்கனவே தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகின்றது.
இந்த நூலின் அறிமுக விழா நாளை சனிக்கிழமை ஜனவரி 9ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள, கோலாலம்பூர் மாநகரசபை மண்டபத்தில் (ஆடிட்டோரியம் டிபிகேஎல் -Auditorium DBKL) நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் வைரமுத்துவின் இலக்கியச் சொற்பொழிவும் இடம் பெறும்.
மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை வெளியீடு செய்வார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், வாழ்த்துரை வழங்குவார்.
மலேசியாவின் பிரபல எழுத்தாளரும், நூலாய்வாளருமான டாக்டர் ரெ.கார்த்திகேசு வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை திறனாய்வு செய்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.
தமிழகத்தின் வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்.
முதல் நூலை தொழிலதிபர் டத்தோஸ்ரீ புருஷோத்தமன் பெற்றுக் கொள்வார்.
வைரமுத்துவின் இலக்கியச் சொற்பொழிவைக் கேட்கவும், அவரது சிறுகதைகள் குறித்த திறனாய்வுகளை செவிமெடுக்கவும், இலக்கிய ஆர்வலர்களை, ஏற்பாட்டாளர் பெ.இராஜேந்திரன் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.