ஷா ஆலாம் – ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள நெடுஞ்சாலையில் உயரமான தடுப்புச் சுவர் ஒன்றை பிளஸ் நிறுவனம் கட்டவிருப்பதாகவும், அதன் காரணமாக, நெடுஞ்சாலையிலிருந்து பார்க்கும்போது ஆலயத்தின் கோபுரமும், முன்புறத் தோற்றமும் முற்றாக மறைக்கப்பட்டு விடும் என்றும், கடந்த இரண்டு நாட்களாக நட்பு ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும், ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
தடுப்புச் சுவர் கட்டப்படவிருக்கும் இடத்தைப் பார்வையிடும் டத்தோ ஆர்.எஎஸ்.மணியத்துடன் மற்ற பிளஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் மஇகாவினர்….
இந்நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பில் மஇகா கோத்தா ராஜா கிளையின் தலைவரும், மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஆர்.எஸ்.மணியம் தலைமையில் மஇகா ஷா ஆலாம் தொகுதித் தலைவர் முருகவேல், சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் துரைசாமி ஆகியோர் கலந்து கொள்ள பிளஸ் நிறுவனத்தினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முன்பு வெளியான தகவல்களின்படி, பிளஸ் நிறுவனம், 7 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் எதனையும் கட்டப் போவதில்லை என்றும் ஆலயத்தின் தோற்றத்தை மறைக்கும் கட்டுமானத் திட்டம் எதனையும் பிளஸ் நிறுவனம் கொண்டிருக்கவில்லை என்றும் பேச்சு வார்த்தைகளின் வழியாகத் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பிளஸ் நிறுவனத்தினருடன் கைகுலுக்கும் ஆர்.எஸ்.மணியம் – உடன் இருப்பவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஷா ஆலாம் தொகுதித் தலைவர் முருகவேல் மற்றும் பொறுப்பாளர்கள் – பின்னணியில் மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்தின் கம்பீரத் தோற்றம்
பிளஸ் கட்டவிருப்பது வெறும் 0.9 மீட்டர் உயரமுள்ள வெள்ளத் தடுப்புச் சுவர்தான் என்றும் இந்தக் கட்டுமானத்தின் மூலம் ஆலயத்தின் தோற்றம் பார்வையாளர்கள் பார்க்கும்போதும், நெடுஞ்சாலையிலிருந்து பார்க்கும்போதும், எந்த விததத்திலும் பாதிப்பிருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பிளஸ் நிறுவனத்தினருடனான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் இரண்டே மணி நேரத்தில் மிக சுமுகமான முறையில் நடந்தேறியது என்றும் டத்தோ ஆர்.எஸ்.மணியம் தெரிவித்துள்ளார்.