புதுடில்லி – வழக்கமாக தமிழ்நாட்டு அரசியலில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஜல்லிக்கட்டு அரசியல் நடைபெறுகிறது என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டே அரசியலாக உருமாறி தமிழகத்தை தற்போது உலுக்கி வருகின்றது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னும் அமுலில் இருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள முடிவுக்கு எதிராக திரண்டுள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்கின்றன என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது பீடா எனப்படும் இந்திய விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு. அந்த அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் ஜோஷிபுரா “ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது இந்தியாவின் மீதான கரும்புள்ளியாகும்” என தெரிவித்துள்ளார்,
மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பிடும் வகையில் பீடா வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்று – மாட்டின் வாலை ஒருவர் கடிக்கின்றார்…
“கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, விளையாட்டுகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்டது. தற்போது இந்த தடை விலக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எனவே, பொங்கலுக்கு முன்பாக, பீடா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை உத்தரவு பெறுமா என்ற அடுத்தகட்ட பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.
இருப்பினும் தமிழ்நாட்டில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. தமிழர்களின் பண்டைய, பாரம்பரிய நிகழ்ச்சியான இது தொடரப்பட வேண்டும் – இதனால் மாடுபிடிப்பவர்கள் மரணம் அடைந்தாலும் – இது தொடரப்பட வேண்டும் என போராடி வருகின்றன.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதை பல புகைப்படங்களின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளது பீடா அமைப்பு.
கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 1,100 பேர் காயமடைந்ததாகவும், ஒரு குழந்தை உள்பட 17 பேர் இறந்ததாகவும் பீட்டா கணக்கெடுத்துள்ளது.