Home Featured நாடு ‘வைரமுத்து சிறுகதைகள்’ மலேசியாவில் அறிமுகவிழா சிறப்பாக நடந்தேறியது!

‘வைரமுத்து சிறுகதைகள்’ மலேசியாவில் அறிமுகவிழா சிறப்பாக நடந்தேறியது!

1231
0
SHARE
Ad

Vairamuthu-short story book-posterகோலாலம்பூர் – கவிப் பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் மலர்ந்த 40 சிறுகதைகளின் தொகுப்பு நூலான ‘வைரமுத்துவின் சிறுகதைகள்’ இன்று மாலை கோலாலம்பூரில், கோலாகலமான முறையில், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கோலாலம்பூர் மாநகரசபை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், விழா ஏற்பாட்டாளருமான பெ.இராஜேந்திரன், வைரமுத்துவின் சிறுகதைகள் தன்னை எவ்விதத்தில் பாதித்தன என்பது குறித்து எடுத்துரைத்தார்.

மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையுரையாற்றி, நூலை வெளியிட்டார். அவர் தனது உரையில், வைரமுத்துவின் சிறுகதைகளில் மூன்றைப் படித்ததாகவும், வித்தியாசமான தலைப்புகள் கொண்ட காரணத்தால் அவற்றைத் தான் படிப்பதற்காகத் தேர்ந்தெடுத்ததற்காகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தான் படித்த அந்த மூன்று கதைகளின் அம்சங்களைப் பற்றியும் சுப்ரா தொடர்ந்து தனது உரையில் விவரித்தார்.

வாழ்த்துரை வழங்கிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், தனது பள்ளிப் பருவ காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும், வைரமுத்துவின் பாடல்களோடும், கவிதைகளோடும், தான் பயணம் செய்து வந்துள்ளதாகவும், அண்மையில் நடந்த மஇகா தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த போதும், வைரமுத்துவின் கவிதைதான் தனக்கு ஆறுதல் தந்ததாகவும் கூறினார்.

டாக்டர் ரெ.கார்த்திகேசு வைரமுத்துவின் சிறுகதைகளைத் திறனாய்வு செய்தார்.

வைரமுத்துவுக்கு சிறப்பு செய்யும் வகையில் ஆளுயர, பிரம்மாண்டமான, மஞ்சள் நிற மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. அந்த மாலையை டாக்டர் சுப்ராவும், டத்தோ சரவணனும் இரண்டு பக்கமும் இருந்து வைரமுத்துவுக்கு அணிவித்தனர்.

அந்த மாலையின் ஒவ்வொரு பூக்களும் மலேசியத் தமிழர்களின் வாழ்த்துகளாகத் தான் கருதுவதாக வைரமுத்து பின்னர் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீட்டின் போது வந்திருந்தவர்கள் வரிசையில் நின்று ‘வைரமுத்துவின் சிறுகதைகள்’ நூலை வாங்கினர்.

பின்னர் வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். ஏறத்தாழ 1 மணி நேரம் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் செல்லியலில் தொடர்ந்து இடம் பெறும்.