கோலாலம்பூர் – முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் ‘ஒரு மூத்த தலைவர்’ என்ற முறையில் நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ளவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மீதான அவதூறு வழக்கு விவகாரத்தில் தன்னை தற்காத்தும், எதிர்வாதமும் செய்து வரும் லிங் பற்றி நஜிப்பிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட லிங், எனது பெயருக்கும், கௌரவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்” என நஜிப் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் கலந்தாலோசிக்காமலேயே அப்படி ஒரு அவதூறு வார்த்தைகளை லிங் பிரயோகித்திருக்கத் தேவையில்லை என்றும் பிரதமர் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
லிங் மீது வழக்குத் தொடுக்க தனக்கு உரிமை உள்ளதையும் நஜிப் சுட்டிக் காட்டியுள்ளார்.
“மலேசியக் குடிமகன் என்ற முறையிலும், பிரதமர், நிதியமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமுதாயத் தலைவர் என்ற முறையிலும், எனது புகழுக்கும், கௌரவித்திற்கும், களங்கம் விளைவிக்கும் எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் லிங் மீது வழக்குத் தொடுக்க எனக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.