கோலாலம்பூர் – விண்டோஸ் 10 இயங்குதளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, விண்டோஸ் 8 மற்றும் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ (Internet Explorer) 8, 9, 10 ஆகியவற்றுக்கான ஆதரவை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் வெளியாகி உள்ள அறிவிப்பில், “ஜனவரி 12, 2016 (நேற்று) முதல் தற்போதய இயங்குதளப் பதிப்பு (விண்டோஸ் 10) உலாவிக்கு மட்டும் தேவையான பாதுகாப்பு மேம்பாடுகள் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் விண்டோஸ் 8-க்கான பாதுகாப்பு மேம்பாடுகளும் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பினால், உடனடியாக விண்டோஸ் 8 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்காது என்று அர்த்தமில்லை. அவற்றுக்கான மாதாந்திர அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்பப்படும் மேம்பாடுகள் இனி கிடைக்காது. இதனால் விண்டோஸ் 8 பயன்படுத்தும் பயனர்களின் சாதனங்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான விண்டோஸ் 8, ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், வெளியீட்டிற்குப் மிகப் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தது. அதன் பிறகு பயனர்களை திருப்திபடுத்துவதற்காக நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.