ஜாகர்த்தா – பல முனைகளில் கேட்ட வெடிகுண்டுச் சத்தங்கள், துப்பாக்கிச் சூடுகள் – இவற்றுக்கிடையே ஜாகர்த்தாவில் இன்று தொடங்கிய வெடிகுண்டுத் தாக்குதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இது என இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வர்ணித்துள்ளதோடு அனைவரும் அமைதி காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மரணமடைந்த 7 பேரில் நால்வர் சந்தேகத்திற்குரிய தாக்குதல்தாரர்கள் என இந்தோனேசியக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாரினா பேரங்காடிக்கு (Sarinah shopping complex) அருகில் உள்ள ஒரு காவல் நிலையம், மற்றும் ஸ்டார் பக்ஸ் தொடர் காப்பி உணவகம் ஆகியவற்றுக்கு அருகில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன.
அந்தத் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட நால்வர் தீவிரவாதிகள் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
காவல் துறையைச் சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர். தாக்குதல்காரர்கள் இனி யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்டார் பக்ஸ் உணவக வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதோடு, ஸ்டார் பக்ஸ் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.