சென்னை – ஊர்த்திருவிழாவிற்கு ஆட வரும் கரகாட்டக் கலைஞர்களுக்கு அந்த ஊரே சேர்ந்து சகல மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவர்களின் அற்புதமான நடனக் கலையை பய பக்தியுடன் பார்த்து ரசித்த காலம் போய், இன்று காலப்போக்கில் அந்தக் கரகாட்டக் கலை வெறும் ஆபாச அசைவுகள் கொண்ட நடனங்களாகவும், இரட்டை அர்த்த பாடல்களாகவும் மாறிவிட்டது.
அப்படி காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு விட்ட கலைஞர் போக, சிலர் இன்றும் தனது தாத்தன், அப்பன் கற்றுக் கொடுத்த அற்புதமான கரகாட்டக் கலையை குலசாமியாகப் பார்த்துக் கொண்டும், கலைஞர் என்ற சுயமரியாதையையும் இழக்க முடியாமலும் ஏழ்மை நிலையில் வாடி தவிப்பதை நாளிதழ்களில் படித்திருப்போம்.
அப்படிப்பட்ட ஒரு கலைக்குழுவின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தான் ‘தாரை தப்பட்டை’
கரகாட்டக்கலைக்கு ஏன் இந்த நிலை? அதற்குப் பின்புலமான கலாச்சார மாற்றங்கள் என்ன? போன்றவைக்கெல்லாம் ஆழமாகச் செல்லாமல், பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு கரகாட்டக்குழு எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து தனது வழக்கமான இரத்தம் சொட்டும் பாணியில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலா.
கதைச்சுருக்கம்
சன்னாசியின் (சசிக்குமார்) கரகாட்டக்குழுவை நம்பி சில கலைஞர்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் சூராவளிக்கு (வரலட்சுமி) சசிக்குமார் மீது காதல். சன்னாசிக்கு மனதில் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னை நம்பியிருக்கும் கலைஞர்களின் நலனுக்காகவே பாடுபடுகின்றார்.
சூராவளியின் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால், சன்னாசியின் கரகாட்டக்குழு மொத்தமும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. அந்தச் சூழ்நிலையில், சூராவளி ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதை அறியும் சசிக்குமார் அவரைக் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.
நடிப்பு
கதாநாயகன் சசிக்குமார் தான் என்றாலும் கூட, படத்தில் கதாநாயகனையும் மீறி நம்மைக் கவர்ந்து இழுப்பது வரலட்சுமி சரத்குமார் தான்.
சூராவளி என்ற கதாப்பாத்திரத்தில் அச்சு அசலாக ஒரு கரகாட்டக் கலைஞராகவே வாழ்ந்திருக்கிறார்.
படம் தொடங்குவதற்கு முன்னர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகத்தை சசிக்குமார் வாசிக்கிறார். அதற்குப் பதிலாக வரலட்சுமியை வாசிக்க வைத்திருக்கலாம். காரணம், படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் தான் குடிக்கிறார். (அதற்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வரப் போகின்றன என்பது இனிமேல் தான் தெரியும்).
சசிக்குமாரை விடாப்பிடியாக விரட்டி விரட்டி காதலிப்பதாகட்டும், தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபப்பட்டு தூக்கிப் போட்டு அடிப்பதாகட்டும் வரலட்சுமி ‘சூராவளி’க்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றார்.
“மொத எம் மாமன் பசியாத்துங்க… என் மாமன் பசின்னு சொன்னா நான் அம்மணமா கூட ஆடுவேன்” இந்த வசனமும், அந்தக் காட்சியின் வலிமையும் படம் பார்க்கும் போது தெரியும். வரலட்சுமி கிரேட்…
சன்னாசி கதாப்பாத்திரத்தில் சசிக்குமார் மிக இயல்பாக நடித்திருக்கிறார். என்றாலும் அவரின் முந்தைய படங்களுக்கும், இந்தப் படத்திற்கும் நடிப்பில் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை.
தொட்டதற்கெல்லாம் வரலட்சுமியை தலையிலேயே அடிப்பதும், இல்லையென்றால், ஆட்டக்கார சிரிக்கி, அவளே, இவளே என்று கெட்டவார்த்தைகளை பிரயோகிப்பதுமாக இருக்கிறது சசிக்குமார் கதாப்பாத்திரம்.
ஆனால் தனது தந்தை மீது கோபம் கொள்வது, வரலட்சுமியின் துயரம் கண்டு கண்ணீர் சிந்துவதுவது, தனது குழுவினரின் நலனில் அக்கறை கொள்வது போன்ற காட்சிகளில் மட்டும் சசிக்குமாரை ரசிக்க முடிகின்றது.
அடுத்ததாக படத்தில் நம்மை ஈர்ப்பது சசிக்குமாரின் அப்பாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் தான்.
அனுபவம் வாய்ந்த கரகாட்டக் கலைஞர் என்ற முறையில் திமிருடனும், யாருக்கும் பணிந்து கொடுக்காத கம்பீரத்துடன் வலம் வருவதும், இன்றைய காலத்துக் கலைஞர்களை கண்டபடி திட்டித் தீர்ப்பதுமாக நடிப்பில் கலக்கியிருக்கிறார். கதையோட்டத்திற்கு அவர் இருப்பு பக்கபலம் சேர்த்திருக்கிறது.
இவர்கள் தவிர புதுமுக வில்லன் ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் பார்த்த போது ஏற்பட்ட ஒரு மிரட்டல் இவரிடம் இல்லையென்றாலும் கூட அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்துகின்றார்.
ஒளிப்பதிவு
செழியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அத்தனை உயிர்ப்பு. அந்தமான் நாட்டில் நடக்கும் காட்சிகளில் ஒரு இடத்தில் கூட கதைக்குச் சம்பந்தமில்லாத இடங்களை படம்பிடிக்காமல், எதார்த்தமாக காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு. அதன் காரணமாக, உண்மையில் அக்காட்சிகள் அந்தமானில் தான் படம்பிடிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் கூட எழலாம்.
இசை
இசைஞானியின் 1000-மாவது படம். இசை பற்றி சொல்லவா வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு பாடல்கள் யூடியூப்பில் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் அதற்கு அத்தனை வரவேற்பு.
பின்னணி இசையும், பாடல்களும் தாரை தப்பட்டையோடு பட்டையைக் கிளப்பியிருக்கிறது.
யாருக்கான படம்?
பாலாவின் வழக்கமான பாணியில் படம் இயக்கப்பட்டிருந்தாலும் கூட, வழக்கமாக அவர் படங்களில் இடைவேளைக்கு முன்பு வரை இருக்கும் ஜனரஞ்சகமான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் மிகக் குறைவு. அவற்றை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மேலும், பாலாவிடமிருந்து தொடர்ந்து ஒரே மாதிரியான பாணியைப் பார்த்துவிட்டதால், முடிவு இது தான் என்று ரசிகர்களால் கணித்து விட முடிவது படத்திற்கு மிகப் பெரிய பலவீனம்.
அதோடு கடைசி கிளைமாக்ஸ் சண்டை கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்து பலர் முடிவிற்கு முன்னரே எழுந்து வெளியே செல்வதைக் காண முடிந்தது.
மொத்தத்தில், ‘தாரை தப்பட்டை’ இளையராஜாவின் இசையாலும், முன்பாதியில் இருக்கும் கரகாட்ட காட்சிகளாலும், வரலட்சுமியின் நடிப்பாலும் மட்டுமே ஈர்க்கிறது.
பாலா பட ரசிகர்களைத் தவிர குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏதுவான படம் கிடையாது.
– ஃபீனிக்ஸ்தாசன்