கோலாலம்பூர் – பழைய பகையை காரணம் காட்டி ஒரு தாதா கொலையில், கதாநாயகன் சிக்க வைக்கப்படுகிறார். அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? உண்மையில் தாதாவை கொலை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும், வழக்கமான கமர்சியல் ஆட்டம் தான் கதகளி. ஆனால் படத்தில், டாடா சுமோ பறப்பது, ‘ஏய்..ஏய்’ என்ற உச்சஸ்தாயியில் கத்துவது, குண்டுகள் வெடிக்கச் செய்வது போன்ற ஓவர் பில்டப்புகள் இல்லாமல், மிக இயல்பாக, அதே சமயம் விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருக்கிறார் ‘பசங்க(2)’ பாண்டிராஜ்.
கதைசுருக்கம்
கடலூர் பகுதியின் கடல் பரப்பு முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘குடும்பஸ்த’ வில்லன் தம்பா. இரு ‘முரட்டு’ மச்சான்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் உதவியுடன் அனைத்து திரைமறைவு வேலைகளையும் ஒளிவுமறைவின்றி செய்து வருகிறான். தம்பாவினால் பாதிக்கப்பட்டு, ஊரைவிட்டு வெளியேறும் கதாநாயகன், 4 வருடங்கள் அமெரிக்காவில் இருந்து விட்டு சொந்த ஊர் திரும்புகிறார். தம்பாவின் அட்டகாசங்கள் இன்னும் முடிவிற்கு வரவில்லை என மனம் வெம்புகிறார். அடுத்த 4 நாட்களில், தான் காதலித்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதால், தம்பாவின் நினைப்பை மறந்து கல்யாண வேலைகளில் ஜரூராக இருக்கிறான். ஒருநாள் தம்பா படுகொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலைப்பழி, கதாநாயகன் மேல் விழுகிறது. தன்னை சிக்க வைக்க எதிரிகள் ஆடும் கதகளியில், கதாநாயகனுக்கு என்ன ஆனது என்பதே மீதிக் கதை.
குடும்பத்தை பாதுகாக்க போராடுவது, முதல் பாதியில் வில்லன்களைக் கண்டு விலகிப் போவது, பிற்பாதியில் வில்லன்களை விரட்டி அடிப்பது, இதற்கிடையே காதலியுடன் கொஞ்சல், கெஞ்சல் என ஆறடி விஷால், நடுத்தர வர்க்க இளைஞனாக அமர்க்களம் செய்கிறார். கதாநாயகியாக ‘மெட்ராஸ்’ கேத்ரின் தெரஸா. விஷாலுடன் காதல், கொஞ்சல், அப்புறம் 4 காட்சிகளுக்கு வருகிறார். சாரி அவ்வளவு தான்.
இவர்கள் தவிர தாதா தம்பாவாக வரும் நடிகர் மதுசூதன ராவ் (‘கோலிசோடா’ நாயுடு ), விஷாலின் அண்ணன் மிமி கோபி, ஜெயபிரகாஷ் (இரண்டு காட்சிகள் மட்டும்), ‘திமிரு’ பவன், கருணாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், கிரண் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். என்றாலும், ‘கெட்ட’ காவல்துறை அதிகாரியாக நடித்து இருக்கும் ‘கும்கி’ ஸ்ரீஜித் ரவி பெரிய அளவில் கவனம் ஈர்க்கிறார்.
கருணாசின் நகைச்சுவை சில காட்சிகளில் சிரிப்பையும், சில காட்சிகளில் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. ‘எதுக்குடா நல்லதும் செஞ்சுட்டு வெளியவும் சொல்லிக்கிறீங்க’ என்று அவர் யாரை நினைத்து கொந்தளித்தாரோ? நாட்டாமைக்கு மட்டுமே வெளிச்சம்.
திரைக்கதை
கதாப்பத்திரங்களின் அறிமுகம், தாதாவிற்கான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், விஷால்-கேத்ரின் தெரஸா இடையேயான காதல் என முதல் பாதி அதரப்பழசான காட்சிகள் தான். என்றாலும், தாதா கொலை செய்யப்படுவதில் பற்றி எரியத் துவங்கும் திரைக்கதை, சுபம் போட்டு முடியும் வரை அதே நெருப்புடன் வைத்திருந்ததற்கு பாண்டிராஜிற்கு பாராட்டுக்கள்.
குறிப்பாக கடைசி 20 நிமிடங்களும், கொலையாளி யார்? என்று வெளிப்படும் காட்சிகளிலும் திரை அரங்கில், விசில் சத்தம் காதைப் பிளந்ததை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனாலும், இடை இடையே அருண் விஜயின் ‘தடையற தாக்க’ படத்தின் சாயல் தோன்றுகிறதே (எனக்கு மட்டும் அல்ல) பாண்டிராஜ் சார்.
வசனம்
இயக்குனர் பாண்டிராஜ் வழக்கமாக முத்திரை பதிக்கும் வசனங்களுக்கான வேலை இந்தப் படத்தில் அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. மிக இயல்பான படத்தில், கதாநாயகனுக்கு ‘பஞ்ச்’ வசனங்கள் வைத்தால், மீண்டும் ‘ஆம்பள’ ஆகிவிடுமே. அதனால் தன்முனைப்புடன் அதனைத் தவிர்த்திருக்கிறார். மற்றப்படி தனிப்பட்டு வசனங்கள் எதுவும் மனதில் பதியவில்லை.
குடும்பம், பாசம், காதல் என முதல் பாதி வரையிலான காட்சியமைப்புகளை மிக எதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியமின் கேமரா, இரண்டாம் பாதியில் கதகளி ஆடி இருக்கிறது. விஷால் இருட்டில் ஓடும் காட்சிகள் பரபரக்கிறது.
இரண்டு ‘சுமார்’ பாடல்கள் கொடுத்த’ஹிப்பாப் தமிழா’ ஆதி, கதகளி பாடல் மற்றும் பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார்.
மொத்தத்தில் கதகளி ஆட்டம் – இரண்டாம் பாதியில் மட்டும்.
– சுரேஷ் சிவசங்கரன்